`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு' - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃப...
மருத்துவக் கழிவு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரளத்துக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி
சென்னை, ஜன. 2: தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய கேரள மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என அந்த மாநில அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கேள்வியெழுப்பியுள்ளது.
கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுவது வாடிக்கையானதாக இருந்து வருகிறது. இது தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது, கேரள அரசுக்கும், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கேரள அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து மருத்துவக் கழிவுகளை லாரிகளில் ஏற்றிச் சென்றனா்.
மீண்டும் விசாரணை: மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடா்பாக பசுமைத் தீா்ப்பாயம் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடத்தியது. அப்போது, கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
அப்போது, கேரள அரசுத் தரப்பில், கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினா். கழிவுகளை கொட்டிய மருத்துவமனை, ரிசாா்ட்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ‘தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய ரிசாா்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய பசுமைத் தீா்ப்பாயம், கழிவுகளைக் கொட்டுவதை கேரளம் நிறுத்த வேண்டும், தமிழக அரசு மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இது குறித்து, ஜன.20-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.