சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
Doctor Vikatan: ஒரு மாதத்தில் எத்தனை கிலோ எடை குறையலாம், தினமும் எடையை செக் பண்ணலாமா?
Doctor Vikatan: ஒரு மாதத்தில் இத்தனை கிலோதான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா... சிலர் ஒரே மாதத்தில் 10- 12 கிலோவெல்லாம் குறைத்ததாகச் சொல்கிறார்களே... அது சரியானதா... தினமும் உடல் எடையை சரிபார்க்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 2 முதல் 2.5 கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதுதான் இயல்பானதும்கூட. ஆர்வக் கோளாறில் ஒரே மாதத்தில் 10 கிலோ, 12 கிலோ எடையை எல்லாம் குறைக்க முயற்சி செய்வது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
குறுகிய காலத்தில் அளவுக்கதிமான எடைக்குறைப்பு என்பது வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கி, தசை இழப்பை ஏற்படுத்தும். தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து, உடல் ஆற்றலையும் குறைக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் ஆரம்பத்தில் ஒருவர் இழப்பதெல்லாம் உடலில் உள்ள தண்ணீரின் எடையைத்தான். அதன் பிறகு அவர் எடுத்துக்கொள்ளும் உணவு, அவற்றின் கலோரி ஆகியவற்றைப் பொறுத்துதான் தசை மற்றும் கொழுப்பு ஆகியவை குறையத் தொடங்கும்.
சில நாள்களில் ஹெவியான உணவுகளைச் சாப்பிட நேரிடும். அந்த உணவுகளில் உள்ள அதிகமான கார்போஹைட்ரேட் உடலில் நீர் சேர்வதை அதிகரிக்கும். இனிப்புகள், பழங்கள் என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் இருக்கும். பலமாக உணவு உண்ட அடுத்தநாளே எடையைச் சரிபார்ப்பது தவறு. எடையில் ஏற்பட்ட ஏற்றம் அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் குறையும்.
விசேஷங்கள், விருந்துகள் வரப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தால், உடற்பயிற்சிகளைத் தவறவிடாமல் செய்ய வேண்டியது முக்கியம். வெளியில் சாப்பிடப் போவது தெரிந்தால் அன்றைய தினம் சற்று அதிகம் வொர்க் அவுட் செய்யலாம். அடுத்தவேளை சாப்பிடும்போது ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல்நாள் இரவு பலமான விருந்து சாப்பிட்டிருந்தால், அடுத்த நாள் காலையில் காபியோ, கிரீன் டீயோ குடித்துவிட்டு, காலை உணவைத் தவிர்த்து விடலாம். கொஞ்சமாக சாதம், பருப்பு மற்றும் காய்கறிகளுடன் நேரடியாக மதிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.
15 நாள்களுக்கொரு முறை எடை பார்த்தால் போதும். இன்ச் டேப் பயன்படுத்தி மார்பளவு, இடுப்பு, வயிறு மற்றும் தொடைப்பகுதிகளையும் அளந்து பாருங்கள். தினமும் எடையை செக் செய்ய வேண்டியதில்லை. மாதவிலக்கு நாள்களிலும் உடல் எடையில் ஏற்றம் இருக்கலாம் என்பதால் அப்போதும் அதை சரிபார்க்கத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.