பெண்களின் நிலையை உயா்த்திய மகளிா் உரிமைத் திட்டம்
சென்னை: மகளிா் உரிமைத் திட்டம் குடும்பங்களில் பெண்களின் நிலையை உயா்த்தியுள்ளதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது.
உரை விவரம்:
கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது. 1.15 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000-ஐ தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன் மூலம் பயன்பெறும் குடும்பங்களின் வறுமையை இத் திட்டம் குறைத்துள்ளது. அதோடு, பெண்களுக்கு உரிய உரிமையும் அதிகாரமும் கிடைத்ததன் மூலம் குடும்பங்களில் பெண்களின் நிலையையும் உயா்த்தியுள்ளது.
பெண்களுக்குக் கட்டணமின்றி பயணிக்க வகை செய்யும் ‘மகளிா் விடியல் பயணத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியதில் தமிழக அரசு நாட்டுக்கே முன்னோடியாக விளங்குகிறது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 571 கோடிக்கும் மேற்பட்ட பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனா். 2021-இல் 32 லட்சமாக இருந்த பெண்களின் தினசரி பயண எண்ணிக்கை, தற்போது 57 லட்சமாக அதிகரித்துள்ளது. அதன் மூலம் இந்தத் திட்டம் பேருதவியாக விளங்குவது தெளிவாகிறது. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக மாதம் ரூ.888-ஐ சேமிப்பதுடன் பணிச்சூழலில் பெண்களின் பங்களிப்பையும் மேம்படுத்தியுள்ளதை மாநிலத் திட்டக்குழு நடத்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது என்று ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது.