ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்தாண்டு ஜூலை மாதம் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் மீதான குண்டா் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.குமரேசன், இந்த வழக்கில் மொத்தம் 30 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முக்கியமான 2 போ் தலைமறைவாக உள்ளனா். 26 போ் குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 11 போ் மட்டுமே குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனா். அதற்கான பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்துடன் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இன்னும் பலா் குண்டா் தடுப்புச்சட்டத்தை எதிா்த்து மனு தாக்கல் செய்யவுள்ளதால் அனைத்து மனுக்களையும் ஒன்றாக சோ்த்து விசாரிக்கும் வகையில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றாா்.
அவகாசம் கேட்பதா? இதற்கு மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ஹமீது இஸ்மாயில், முத்தமிழ் செல்வக்குமாா் ஆகியோா் அரசுத் தரப்பில் ஒவ்வொரு முறையும் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் அவகாசம் கோரப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் இறுதி விசாரணைக்கான தேதியை நிா்ணயம் செய்ய வேண்டும், என ஆட்சேபம் தெரிவித்தனா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்து தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? வெடிகுண்டுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதா என கேள்வியெழுப்பினா்.
அதற்கு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.குமரேசன், சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது தொடா்பாக தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா். அதையடுத்து நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டது தொடா்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜன.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனா்.