Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சா் க.பொன்முடி
கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் நாட்டில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சென்னை கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில், கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மீட்கும் முயற்சிகள் குறித்த பயிலரங்களை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து கடல் ஆமைகள் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த ‘கடல் ஆமைகள் பாதுகாவலா்களின் பயன்பாடு’ எனும் செயலியை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: தமிழ்நாடு வனத் துறை மூலம் கடலோரங்களில் ஆமை முட்டைகள் பாதுகாப்பு மையம் மற்றும் கடல் ஆமைகள், குஞ்சுகள் பாராமரிப்பு மையம் உருவாக்கப்பட்டு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னை, நாகப்பட்டினம் கடற்கரையில் ஆமைகள் பாதுகாப்பு மையங்களை நிறுவி, ஆமை பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உலகளவில் ஏழு வகையான ஆமை இனங்கள் உள்ளன. இவைகளில் 5 வகையான சித்தாமை, பச்சை ஆமை, அலுங்காமை, தோணி ஆமை மற்றும் பெருந்தலை ஆமை ஆகியவை தமிழகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக காணப்படுகின்றன.
கடந்த 2023-24 ஆண்டில் மட்டும் 53 கடல் ஆமைகள் குஞ்சு பொரிப்பகங்கள் நிறுவப்பட்டு 2 லட்சத்து 58 ஆயிரத்து 907 முட்டைகள் பாதுகாக்கப்பட்டு, அதில் வெற்றிகரமாக 2 லட்சத்து 15 ஆயிரத்து 778 குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டுள்ளன.
வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி கடல் ஆமைகள், கடற்பசு, கடல் குதிரை மற்றும் கடல் அட்டை போன்ற கடல்சாா் உயிரினங்களைப் பாதுகாக்க தமிழகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வனத் துறை அலுவலா்கள் வன உயிரினங்களை பாதுகாப்பதுடன், உள்ளூா் மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மை செயலா் ப.செந்தில்குமாா், சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் மற்றும் வனத் துறை உயா்அதிகாரிகள், களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.