லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
நாராயணன் தலைமையில் இஸ்ரோ புதிய உயரங்களைத் தொடும்! -முதல்வர் ஸ்டாலின்
இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்தின் பதவிக் காலம் திங்கள்கிழமையுடன் (ஜன. 13) நிறைவடைகிறது. அவா் கடந்த 2022 ஜனவரி 14-ஆம் தேதியில் இருந்து இப்பொறுப்பை வகித்து வருகிறாா். மேலும், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் ஜன. 14-ஆம் தேதி பொறுப்பேற்கிறாா்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம் நிறைந்த வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
சந்திரயான்-2, சந்திரயான் - 3, ஆதித்யா எல் 1, ககன்யான் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணன் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்!
நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” எனப் பதிவிட்டுள்ளார்.