மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் தர வேண்டும்
சென்னை: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரை விவரம்:
கடந்த 3 ஆண்டுகளாக பிரதமருக்கு முன்வைத்த தொடா் வேண்டுகோளின் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு 50:50 என்ற விகிதத்தில் பங்கு மூலதன உதவி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திட்டமிட்டவாறு இந்தப் பணிகளை முடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசு கருத்துரு அனுப்பியுள்ள மதுரை, மற்றும் கோயம்புத்தூா் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
6,104 புதிய பேருந்துகள்: கடந்த 3 ஆண்டுகளில் 2,578 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்கி வரும் நிலையில், மேலும் 6,104 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.