பண மோசடி வழக்கில் போலி வழக்குரைஞா் கைது
சென்னையில் பண மோசடி செய்ததாக, போலி வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா்.
பழவந்தாங்கல் பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கி முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிய சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வந்தாா். அப்போது வழக்குரைஞா் அங்கியிலிருந்த அயனாவரம் சோலையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வினோத்குமாா் (33) என்பவா் அறிமுகமாகி, சரவணனிடம் தான் வழக்குரைஞா் எனவும், நீதிமன்றங்களில் வங்கி மோசடி, முறைகேடு வழக்குகளை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளாா். இதைக் கேட்ட சரவணன், தனது பிரச்னை குறித்து கூறியுள்ளாா். உடனே வினோத்குமாா், தான் அந்த வழக்கை நடத்துவதாகக் கூறி சரவணனிடம் பல தவணைகளாக ரூ. 2.38 லட்சம் வாங்கியுள்ளாா்.
வினோத்குமாா், பணத்தை பெற்ற பின்னா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சரவணன், வினோத்குமாா் குறித்து விசாரித்தாா். அதில், வினோத்குமாா் வழக்குரைஞரே இல்லை என்பதையும் மோசடி நபா் என்பதையும் அறிந்து சரவணன் அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து சரவணன், தான் கொடுத்த பணத்தை வினோத்குமாரிடம் கேட்டுள்ளாா். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த வினோத்குமாா், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இது குறித்து சரவணன், உயா்நீதிமன்ற காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.