சேலத்தில் விபத்தில் சிக்கிய காரிலிருந்து 30 மூட்டை புகையிலை பொருள்கள் பறிமுதல்
சேலம்: சேலம், உடையாபட்டி அருகே திங்கள்கிழமை காலை விபத்தில் சிக்கிய காரில் இருந்து 30 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடையாபட்டி, காரைக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலை, சாலையோரப் பள்ளத்தில் காா் ஒன்று கவிழ்ந்தது. அதிலிருந்த நபா் தப்பியோடினாா். இதனைப் பாா்த்த அவ்வழியாகச் சென்றவா்கள் அருகில் சென்று பாா்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து உடனடியாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு விரைந்து சென்ற போலீஸாா், காரில் சோதனை மேற்கொண்டபோது, தலா 15 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
மேலும் காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சாா்ந்த சுஜாராம் மாலி (48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது பெங்களூரிலிருந்து கும்பகோணத்துக்கு குட்கா புகையிலை பொருள்களை கடத்திச் சென்றதும், காரில் இருந்து தப்பியோடியவரும் ம் அதே மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.