ஆளுநரைக் கண்டித்து சேலத்தில் திமுக ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜென்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராகவும் திமுக சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சேலம் கோட்டை பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ் தலைமை வகித்தாா். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், ஆளுநரின் செயலைக் கண்டித்தும், ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய மாவட்ட பொருளாளா் காா்த்திகேயன், செயற்குழு உறுப்பினா்கள் தாமரைக்கண்ணன், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் அசோகன், நாசா்கான் உள்ளிட்ட நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.