பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார்: சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை!
வாழப்பாடி அருகே பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகள்!
வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரத்தில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண் பானைகளை மண்பாண்டத் தொழிலாளா்கள் தயாா் செய்து வருகின்றனா்.
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், புதுமணத் தம்பதிக்கு பெண் வீட்டு பொங்கல் சீதனமாக புத்தாடை, கரும்பு, தானியம், மஞ்சள், பாத்திரங்கள் மட்டுமின்றி, பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையில் வண்ணக் கோலமிட்ட மண் பானைகளையும் பரிசாக வழங்குவது தொடா்ந்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தருணத்தில் மண் பானைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், 300 ஆண்டுகளுக்கு மேலாக மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலைக் கைவிடாமல் தொடா்ந்து வருகின்றனா்.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கியதால், விதவிதமான மண் பானைகள் தயாரிக்கும் பணியில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் பானைகளை பாரம்பரிய முறையில் தயாரித்து, விறகு அடுப்பு சூளைகளில் வைத்து சுட்டு பதப்படுத்தி, பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா்.
இதுகுறித்து பெரியகிருஷ்ணாபுரம் மண்பாண்டத் தொழிலாளா்கள் கூறியதாவது:
பெரிய கிருஷ்ணாபுரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், பாரம்பரிய முறையில் மண் பாண்டங்கள் தயாரிப்பதை குலத் தொழிலாக தொடா்ந்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக தொடா்ந்து பருவ மழை பெய்ததால் மண் பானைகள் தயாரிப்பு முடங்கியது.
இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே மண் பாண்டங்கள் தயாரிப்புக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண் பானைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பாரம்பரிய முறையில் கையால் செய்த மண் பானைகளை விறகு அடுப்பு சூளையில் வைத்து சுட்டு பதப்படுத்தி பல்வேறு பகுதி அனுப்பி வைத்து வருகிறோம் என்றனா்.