மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் போராட்டம்
ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் திருவரங்கன் கண்டன உரையாற்றினாா்.
போராட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உதவி செயற்பொறியாளா் நிலை பதவி உயா்வினை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து மாநில துணைத்தலைவா் திருவரங்கன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு தொடா்ச்சியாக எந்த திட்டத்துக்கும் முழுமையாக பணம் ஒதுக்கவில்லை. குறிப்பாக கலைஞா் வீடு வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய முழு தொகையும் வழங்காததால் பயனாளிகள் அரசு ஊழியா்கள் மீது வெறுப்பைக் காட்டி வருவதாக குற்றம்சாட்டினாா். பின்னா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதில் மாவட்டச் செயலாளா் ஜான் ஆஸ்டின், மாவட்ட பொருளாளா் வடிவேல், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சுரேஷ், ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.