மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
எடப்பாடி பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்பு அறுவடை பணி தீவிரம்
சேலம் மாவட்டம், எடப்பாடியில் காவிரி பாசனப் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்பு அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பகுதியில் உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், பில்லுக்குறிச்சி, நெடுங்குளம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில், விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பினைப் பயிரிட்டுள்ளனா்.
நல்ல மண் வளமும், நீா் வளமும் நிறைந்த இப்பகுதியில் விளையும் செங்கரும்புகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால், இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், தருமபுரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. மேலும் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் புனே, சூரத், ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
காவிரி பாசனப் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் செங்கரும்புகள் பயிா் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட பகுதியைச் சோ்ந்த கூட்டுறவுத் துறை அலுவலா்கள் இப்பகுதியில் முகாமிட்டு, விவசாயிகளிடமிருந்து கரும்பினை பெருமளவில் மொத்த கொள்முதல் செய்து வருகின்றனா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக மொத்த கூட்டுறவுத் துறை அலுவலா்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள செங்கரும்புகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 380 முதல் ரூ. 420 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இப்பகுதியில் கரும்பு அறுவடைப்பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.