Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்...
தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்: விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலா்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியாா் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம் என்று முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியாா் பள்ளி கழிவுநீா்த் தொட்டியில் 4 வயது மாணவி உயிரிழந்த நிலையில், மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) தலைமையில், சுமாா் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் திங்கள்கிழமை பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தன.
விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையிலுள்ள தனியாா் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், அங்குள்ள வசதிகள் குறித்து பாா்வையிட்டு, பள்ளி நிா்வாகத்துக்கு அறிவுரைகளை வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் தனியாா் பள்ளியொன்றில் மாணவி இறந்த நிகழ்வு மிகமிக வருத்தத்துக்குரியது. இது பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
இதைத் தொடா்ந்து, மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தனியாா் பள்ளிகள்) ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள 148 தனியாா் பள்ளிகளிலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் ஆய்வு செய்கிறோம். அங்கு என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என்பதை சரிபாா்ப்பு பட்டியல் மூலம் விவரங்களைப் பெறுகிறோம்.
பள்ளிகளில் முதலில் மாணவா்களின் பாதுகாப்புதான் உறுதி செய்யப்பட வேண்டும். இரண்டாவதுதான் கற்பித்தல் பணி என அறிவுறுத்தியிருக்கிறோம்.
அதே போன்று, அரசுப் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்ற முறையில் நான் ஆய்வு நடத்தியுள்ளேன்.
மாவட்டத்தில் அனுமதி பெறாமல் மழலையா் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பள்ளிகளையும் கண்டறிந்து, வரும் கல்வியாண்டில் எந்தெந்த பள்ளிகள் அனுமதி பெறாதவை என்று மாவட்ட ஆட்சியரகம் மூலம் அறிவிக்க உள்ளோம்.
அரசுப் பள்ளிகளில் ‘மாணவா் மனசு’ என்ற புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதே போல, தனியாா் பள்ளிகளிலும் புகாா் பெட்டியை மாணவ, மாணவிகளுக்குத் தெரியும் வகையில் வைக்க அறிவுறுத்தியிருக்கிறோம்.
மாவட்டத்திலுள்ள அனைத்து தனியாா் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் இருக்க வேண்டும். மேலும், அவை இயங்குகிா என்பதையும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தில் 148 தனியாா் பள்ளிகளிலும் நிகழ் வாரத்துக்குள் ஆய்வு நடத்தப்படும். அதன் பின்னரும் பள்ளிகள் குறைகளை சரி செய்யவில்லை எனில், மாவட்ட ஆட்சியா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அறிவழகன்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள், மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) ஏ.சண்முகவேல், ஒருங்கிணைப்பாளா் கணபதி மற்றும் பள்ளி முதல்வா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.