செய்திகள் :

சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

post image

2024 ஆம் ஆண்டில் நாட்டின் ஆகப் பெரிய சாதனைகளில் ஒன்றை யாருமே பொறுப்பேற்றுக் கொள்ள முன்வராததால் ஒருவராலும் கண்டுகொள்ளப்படாமல் கழிந்துபோய்விட்டது.

ஆனாலும், விடாது கருப்பு என்பதைப் போல அதுவே ஆக்ரோஷமாக முட்டி மோதிப் போராடி விரைவில் செஞ்சுரி அடிக்கும்போது அனைவரும் அதைக் கொண்டாடித்தான் தீர வேண்டியிருக்கும், வேறு வழியே இல்லை, விதி!

ஆமாம், வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத அளவில் அமெரிக்க டாலருக்கான  இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே சென்றுகொண்டிருக்கிறது. ஒரு டாலரின் விலை அல்லது மதிப்பு 85 ரூபாய் வரை சென்றுவிட்ட நிலையில் ஜன. 3-ல் ரூ. 85 ரூபாய் 79 காசுகள்!

இதே நிலைமை நீடித்தால், அமெரிக்காவில் வரும் 20 ஆம் தேதி புதிய அதிபராக  டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் (வெளிநாட்டு வணிகத்தில் நிறைய அதிரடிகளை, புதிய வரி விகிதங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால்), தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும்போதேகூட டாலர் மதிப்பு  100 ரூபாயைத் தொட நேரிடலாம்.

2024 டிசம்பர் மாதத்தில் ஒரு டாலரின் மதிப்பு ரூ. 85 ஆக உயர்ந்தது - ரூபாயின் மதிப்பு குறைந்தது (வரலாற்றுச் சாதனை!). இன்னமும் டாலரின் மதிப்பு குறைவதாகத் தெரியவில்லை.

இத்தனைக்கும் இந்த உயர்வைத் தடுத்து நிறுத்த இந்திய ரிசர்வ்  வங்கியே நேரடியாக, அதிரடியாக அன்னியச் செலாவணிச் சந்தைக் களத்தில் இறங்கி வேலைகளையெல்லாமும் பார்க்கிறது.

வெளிநாட்டு முதலீடுகளின் தீவிர வெளியேற்றம் மற்றும் டாலர் மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றைக்  கருத்தில்கொண்டு, இந்திய ரூபாய் மதிப்பை வலுப்படுத்த  (மேலும் குறைந்துவிடாமல் தடுக்க) கடந்த அக்டோபர் மாதத்தில் 4,450 கோடி டாலர் ( ரூ. 3.82 லட்சம்  கோடி!) தொகையை செலாவணி சந்தையில் இறக்கியதாக இந்திய ரிசர்வ் வங்கியே மாதாந்திர அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது. இதற்காகப் பணச் சந்தையில் (ஸ்பாட் மார்க்கெட்) 9.3 பில்லியன் டாலர்களையும் முன்பேர வர்த்தகத்தில் 35.2 பில்லியன் டாலர்களையும் ரிசர்வ் வங்கி விற்றிருக்கிறது (எனவேதான், 1,090 கோடி டாலர் வெளிநாட்டு முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டபோதிலும் அக்டோபரில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு 30 காசுகள் மட்டுமே குறைந்து ரூ. 84.06-ல் நிலைத்திருந்தது).

அக்டோபரிலும் நவம்பரிலும் நிறுவனரீதியிலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முறையே ரூ. 1.14 லட்சம் கோடி, ரூ. 45,974 கோடியைத் திரும்ப எடுத்துக்கொண்டுவிட்டனர் (நம் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டது). இதனால் பணத்தின் மதிப்பு குறைந்து டாலருக்கான தேவை அதிகரித்துவிட்டது.

தொடர்ந்து, என்னென்னவோ முயற்சிகள் செய்தபோதிலும் குறையாமல் ஆண்டு இறுதியிலிருந்து ரூ. 86-க்கு அருகிலேயே ஊசலாடிக் கொண்டிருக்கிறது மதிப்பு.

இவ்வாறு ரூபாயின் மதிப்பு கண்டமேனிக்குக் குறைந்துகொண்டே செல்வதற்குப் பல காரணங்கள் – பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றம், பங்குகளின் விலை வீழ்ச்சி, பெரு நிறுவனங்களின் மோசமான நிலை, பன்னாட்டு சந்தை நிலவரங்கள், ரஷியா – உக்ரைன் போர், அமெரிக்கா – சீனா பகைச் சூழல், இன்னமும் அறிஞர்களோ ஆய்வாளர்களோ அல்லாத சாதாரண மக்களுக்குப் புரியவராத வேறு பல சந்தைச் சிக்கல்கள்.

எப்படியாவது டாலரின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில் கறாராக இருக்கும் டொனால்ட் டிரம்ப், ஏற்கெனவே, (இந்தியாவும் இடம்பெற்றுள்ள) பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தங்களுக்குள் செலாவணியை உருவாக்கிக் கொள்வது பற்றியெல்லாம் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார் – அதிபர் பொறுப்பேற்றவுடன் அடுத்தடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறாரோ? அமெரிக்க நிதிக் கொள்கையில் எத்தகைய புதிய மாற்றங்களை எல்லாம் கொண்டுவரப் போகிறாரோ?

எது எப்படியிருந்தாலும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் எல்லாருக்கும் தெரிய வந்துள்ள ரிசல்ட் ஒன்றுதான் – ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்துகொண்டே இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ஒரு டாலருக்கான ரூபாய் மதிப்பு – ரூ. 60.95. மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் கடந்த பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தற்போது ரூ. 86-க்குப் பக்கத்தில்!

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி 2022, அக்டோபரில் ஒருமுறை நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை, உள்ளபடியே அமெரிக்க டாலர் மதிப்புதான் உயருகிறது என்றோர் கருத்தைத் தெரிவித்தார் (அப்போது ரூபாய் மதிப்பு 8 சதவிகிதம் குறைந்தது). நிதி அமைச்சரின் அந்தக் கருத்து அப்போது பெரியளவில் ‘மீம்’களுக்கான விஷயமாக மாறி சமூக ஊடகங்களில் வலம் வந்தது; இன்னமும்கூட வந்துகொண்டிருக்கிறது.

[கடந்த ஏப்ரலில் (மக்களவைத் தேர்தலுக்கு முன்) ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் சக்திகாந்த தாஸ் முன்னிலையில் பேசியபோது, இந்திய ரூபாயை உலகளாவியதாக மாற்றப் பத்தாண்டு உத்தியொன்றை உருவாக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்; உருவாக்கிவிட்டார்களா என்று தெரியவில்லை].

ஆனால், இப்போது இந்திய ரூபாயில் 3.82 லட்சம்  கோடியை, 4,450 கோடி டாலரை விற்றும் ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீள முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது நம் நாடு.

“பொருளாதாரத்தைப் பற்றியோ சரிந்துவரும் ரூபாய் மதிப்பு பற்றியோ மத்திய அரசு கவலைப்படாமல் இருப்பது கண்டு நாடு அதிருப்தி அடைந்துள்ளது. மத்திய அரசு தனது பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வது பற்றி மட்டுமே கவலைப்படுகிறது.

“ரூபாய் மதிப்பு கடந்த மூன்று மாதங்களாக வேகமாகச் சரிந்துவருகிறது. ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பை வலுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“இவ்வாறு ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால் மற்ற நாடுகள் இந்தியாவின் பலவீனத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்.

“இதுபோன்றதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திப்போம் என்று நாடு எப்போதும் கற்பனை செய்திருக்காது. ஆனால், இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் நாட்டின் தலைமை எந்தத் திசையில் செல்வது என்பதே தெரியாமல் இருந்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.

“மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி குறையும் என்றும் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசு அறிவித்து வந்துள்ளது. ஆனால், எதுவும் நடக்கவில்லை”.

இவ்வாறு கடுமையாகக் குறை கூறியிருப்பவர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியோ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ அல்லர்.

2013, ஆகஸ்ட் மாதத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசைக் குறைகூறி  குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி ஆற்றிய உரைதான் இது!

பிரதமர் மன்மோகன் சிங், இந்திய ரூபாய் இரண்டுமே மதிப்பிழந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார் நரேந்திர மோடி.

நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததும் டாலரின் விலை ரூ. 40 முதல் 45 ஆகக் குறையும் (அப்போது ரூ. 68.80) என்றொரு கணிப்புகூட ஊடகங்களில் வலம்வந்தது (அல்லது வலம்வரச் செய்யப்பட்டது). மத்தியில் ஆட்சியமைத்தால் டாலர் மதிப்பை ரூ. 40-க்குக் கொண்டுவருவோம் என்று நரேந்திர மோடியும் பேசியிருக்கிறார் – அப்போது டாலர் மதிப்பு ரூ. 56!

வரலாற்றின் நகைமுரண், காலம் மாறி பாரதிய ஜனதா கட்சியே மத்தியில் ஆட்சி அமைத்து, இரு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மோடியின் பேச்சு மோடிக்கே பொருந்திப் போவதாக மாறியிருக்கிறது.

எப்படியோ, ‘டாலரின் மதிப்பு உயர்ந்துகொண்டே’ போவது பற்றி எல்லா தரப்பினரையுமே பேசவைத்து விடும்போல 2025 ஆம் ஆண்டு!

காஸ்ட்லி (ரகசிய) பரிசு!

2023 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வெளிநாட்டுத் தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுகளிலேயே மிகவும் விலை உயர்ந்தது, அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய 7.5 காரட் வைரம்தான் – மதிப்பு 20 ஆயிரம் டாலர்கள், அதாவது, ரூபாய் 17 லட்சம்!

இது தெரிந்த செய்திதான். ஆனால், இதுபற்றித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அப்போது அஜய் போஸ் என்பவர், மக்கள் வரிப் பணத்திலிருந்து வழங்கப்பட்ட இந்தப் பரிசின் மதிப்பு பற்றிக் கேட்டபோது, தெரிவிக்க மறுத்துவிட்ட மத்திய அரசு, இதெல்லாம் வெளிநாட்டு உறவைப் பாதித்துவிடும் என்றும்  கூறிவிட்டது. ஆனால், அமெரிக்காவோ இப்படிப்பட்ட பரிசுகளைப் பற்றியெல்லாம் வெளிப்படையாக அறிவிப்பதில் கொஞ்சமும் தயங்கக் காணோம்! (இந்த நான்கு நாள் பயணத்தின்போது, இந்தியா – அமெரிக்கா இடையே ஒரே ஒரு வர்த்தக உடன்பாட்டில்தான் கையெழுத்திடப்பட்டதாகவும் தகவல்!)

பட்டிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் தானாக முன்வந்து காவல்துறை உயர் பெண் அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருடைய செல்போனில், பதிவு செய்யப்பட்ட ஏராளமான வன்கொடுமைக் காட்சிகள் சிக்கியிருக்கின்றன என்கிறார்கள்.

யார் அந்த சார்? என்ற கேள்வியை எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியொருவரே இல்லை என்று காவல்துறை மறுக்க, அதற்குள்ளாகவே எப்படிக் கூற முடிந்தது என்ற கேள்வியெழ, ஒரே களேபரமாக இருக்கிறது. தலைவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த குற்றச் செயலை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று அரசியல் கட்சிகளை நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. தேசிய மகளிர் ஆணையத்தினரும் வந்து சென்றிருக்கின்றனர் (குஜராத் மாநிலத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 40 ஆயிரம் பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்று தேசிய குற்றப் பதிவு காப்பகம்தான் தெரிவித்திருக்கிறது, இது மகளிர் ஆணையத்துக்குத் தெரிந்திருக்குமா?)

தொலைக்காட்சியை, பத்திரிகைகளைத் திறந்தால் ஒவ்வொரு நாளும்தான் எத்தனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? எத்தனை பாலியல் வன்கொடுமைக் கொலைகள்? அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை அரசியலாக்குவதைப் போல இவற்றையெல்லாமும் எல்லாரும் பேச வேண்டாமா? இந்த வழக்குகள் எல்லாமும் என்னவாகின்றன? ஒரு சோற்றுப் பதமாக அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நடைபெறுவதாகக் கூறப்படும் அத்தனை குளறுபடிகளும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவா? காவல்துறையால், அரசியல்வாதிகளால் நடத்தப் பெறுகின்றனவா? என்னவோ, யோசிக்க யோசிக்க சலித்துப் போய்விடுகிறது. ஆனால், அதுவே குற்றவாளிகளுக்கும் அவர்களைப் போஷிப்பவர்களுக்கும் வசதியாகவும் ஆகிவிடுகிறது.

ம். அண்ணா பல்கலை. விவகாரத்தில் இந்தக் கூத்துகளுக்கு எல்லாம் பிறகு குற்றவாளியும் அவருக்குப் பின்புலமாக இருப்பதாகக் கூறப்படுபவர்களும் தப்பிவிடாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை யாரிடம் வைப்பதென்றுதான் தெரியவில்லை.

இதையும் படிக்க... சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

2024 - கௌதம் கம்பீர் வருகை! இந்திய அணிக்கு எழுச்சியா? வீழ்ச்சியா?

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வருகை இந்திய அணிக்கு எழுச்சியா.. வீழ்ச்சியா? என்பதைப் பற்றி ஒரு கிரிக்கெட் ரசிகனின் பார்வையில்!2024! ஆஹா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அற்புதமான ஆண்டாகவே அமைந்தத... மேலும் பார்க்க

2024 - பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

2024!உலகம் முழுவதும் ‘தேர்தல்களின் ஆண்டு’ அழைக்கப்பட்ட நிகழாண்டில் இந்தியா மட்டுமின்றி, எங்கெங்கு காணினும் பிரசாரங்களும் பேரணிகளும் அணி வகுத்திருந்தன என்று கூறினால் யாரும் மறுக்கமாட்டார்கள். இந்தியாவி... மேலும் பார்க்க

2024 - போரும் படுகொலைகளும்... காஸாவில் தொடரும் துயரம்!

2024 ஆம் ஆண்டில் பல முக்கிய அரசியல் திருப்புமுனைகளும் போர்களும் உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ளன. அரசு அதிகாரங்களின் மோதல் போக்குகளால் தொடர்ந்து உலகம் முழுக்க மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், மி... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ – கியூபாவில் மான்கடா ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் தோல்வியுற்ற நிலையில் கைது செய்யப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயத்துக்காகப் பேசிய உலக வரலாற்று... மேலும் பார்க்க

2024 - இந்தியத் தேர்தல் களத்தில் வென்றதும் வீழ்ந்ததும்!

2024! யாருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததோ, இல்லையோ? இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மிக முக்கியமான ஆண்டாகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்.. அனைவரும் எதிர்பார்த்திருந்த மக்களவைத் தேர்தல் ஒருபுறம்,... மேலும் பார்க்க

அதிகாரத்திற்கு அடங்காத போராளி கவிஞர் ஹபீப் ஜாலிப்! கவிதைதான் குற்றம்- 10

‘ஒன்று இரண்டானது; இரண்டு, துண்டாகி மூன்றானது’ என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் 1947 ஆகஸ்டுக்குப் பிந்தைய நிகழ்வுகளின் மிகச் சுருக்கமான, ஒற்றைவரி அரசியல் வரலாறு. காலங்காலமாக ஒன்றாக இருந்தாலும் ஒன்றிணைய... மேலும் பார்க்க