செய்திகள் :

2024 - போரும் படுகொலைகளும்... காஸாவில் தொடரும் துயரம்!

post image

2024 ஆம் ஆண்டில் பல முக்கிய அரசியல் திருப்புமுனைகளும் போர்களும் உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ளன. அரசு அதிகாரங்களின் மோதல் போக்குகளால் தொடர்ந்து உலகம் முழுக்க மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில், மிக முக்கியமாக இந்தாண்டு காஸாவில் இஸ்ரேல் நடத்திய போர்க் குற்றங்களையும் படுகொலைகளையும் குறிப்பிடவேண்டும்.

இஸ்ரேல் - காஸா போர்:

காஸாவில் நடைபெற்று வரும் போர் 16 மாதங்களைக் கடந்துள்ளது. போர்நிறுத்தம் தொடர்பாக சர்வதேச கோரிக்கைகள் எழுந்துவரும் வேளையில் பாலஸ்தீன மக்கள் எந்த நம்பிக்கையுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

இஸ்ரேல் காஸாவில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளும் தொடர்ச்சியான அடக்குமுறையும் மொத்தமாக அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய பெரியளவிலான தாக்குதலுக்கு வித்திட்டது.

இந்தத் தாக்குதலில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 240 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டனர்.

காஸா குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த வீடுகள்

அன்று முதல் இஸ்ரேல் காஸாவில் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 45,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 1,06,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.19 லட்சம் மக்கள் காஸாவிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

போர் பாதிப்புகள்:

காஸாவைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர், உணவு, சுகாதார பற்றாக்குறையோடு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 83% நிவாரண பொருள்கள் காஸாவினுள் வருவதை இஸ்ரேல் தடுத்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஸாவின் வடக்குப் பகுதியில் ஏறக்குறைய மூன்று மாதங்களாக எந்த உதவியும் வராத நிலையில், சுமார் 65,000 பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.

காஸா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ள தகவலின்படி கடந்த ஏப்ரல் 1 அன்று 28 குழந்தைகள் உட்பட 32 பேர் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காஸாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.

உணவுக்காகக் காத்திருக்கும் காஸா மக்கள்

இதனைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு மார்ச் மாதத்தில் கமால் அத்வான் மற்றும் அல்-அவ்தா மருத்துவமனைகளில் "பட்டினியால் இறக்கும் குழந்தைகள்" குறித்த பிரச்னைகளை ஆவணப்படுத்தும் வேலைகளில் இறங்கியது.

காஸாவின் தெற்கில் உதவிகள் அணுகக்கூடிய நிலையில் இருந்தாலும் அவை போதுமான அளவில் இல்லை. அங்குமே, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பு:

சில நாடுகள் வெளிப்படையாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் படுகொலைகள் செய்ததாக குற்றம் சாட்டிய நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று.

அந்த நாடு இஸ்ரேலுக்கு எதிரான ஒரு வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்தது. கடந்த ஜனவரி மாதம், போர் தொடர்பான ஒப்பந்தத்தை மீறும் செயல்களை இஸ்ரேல் செய்ததை நீதிமன்றம் கண்டறிந்தது.

போரில் பலியான மக்கள் உடல்களின் முன் நின்று பிரார்த்தனையில் ஈடுபடும் காஸா மக்கள்

ஸ்பெயின், பெல்ஜியம், துருக்கி, எகிப்து, சிலி உள்பட குறைந்தது 14 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் வழக்கில் இணைந்து காஸாவுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

போர்க்குற்றம் மீதான நடவடிக்கை:

இஸ்ரேல் காஸாவில் நடத்திய போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் ஆகியோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 124 உறுப்பு நாடுகளில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கடந்த நவம்பரில் நெதன்யாகு, கேலன்ட் மற்றும் ஹமாஸ் தளபதி முகமது டெய்ஃப் ஆகியோருக்கு பிடி வாரண்ட்களை வழங்கியது. இதில், ஹமாஸ் தளபதி ஜூலை மாதம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதை தீர்மானிக்கும் நிலையில் இல்லாததாக ஐசிசி தரப்பு தெரிவித்தது. நெதன்யாகு மற்றும் கேலன்ட் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகப் பொறுப்பேற்க வேண்டும்" என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்கள்:

கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல் ஐ.நா நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பல ஊழியர்களை அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. அதில், ஒன்பது ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டதை உறுதிசெய்த பிறகு ஐ.நா அவர்களை பணிநீக்கம் செய்தது.

பின்னர், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் உள்ள ஐ.நா நடத்திய பள்ளிகளில் குறைந்தது 70% அழிக்கப்பட்டதாக காஸா வெளியிட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அவற்றில் 95% பள்ளிகள் தாக்குதல்களின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்குமிடங்களாக பயன்படுத்தப்பட்டவை.

தெற்கு காஸாவில் இருந்து இடம்பெயறும் மக்கள்

பொதுமக்களின் உயிரிழப்பைத் குறைப்பதே தனது படைகளின் நோக்கம் என்று கூறும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளது. மேலும், ஹமாஸ் தனது இராணுவ நடவடிக்கைகளைப் பாதுகாக்க மக்களைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது.

காஸாவில் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை. இஸ்ரேல் கூறும் "பாதுகாப்பான பகுதிகள்" கூட மிகவும் அச்சுறுத்தும் நிலையிலேயே இருப்பதாக சர்வதேச அமைப்புகள் பலமுறை குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

பாதுகாப்பான மண்டலமாக இஸ்ரேல் கூறிய தெற்கு காஸாவில் உள்ள அல்-மவாசி முகாமில் பல பாலஸ்தீனியர்கள் டிசம்பர் 4 அன்று இஸ்ரேலின் குண்டுவீச்சில் பலியாகினர். இருந்தபோதிலும், ஹமாஸ் மீதான பொது விமர்சனம் காஸாவின் பொது இடங்களிலும், இணையத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மகனை கையில் ஏந்தி அழும் தந்தை

ஹமாஸ் படையினர் நெரிசலான சந்தைகளுக்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பணயக் கைதிகளை மறைத்து வைப்பதாகவும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து ராக்கெட்டுகளை ஏவுவதாகவும் காஸாவைச் சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காஸாவின் மிக முக்கியமான மதப் பிரமுகரான சல்மான் அல்-தய்யா, சில வாரங்களுக்கு முன் பொதுமக்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராக்கெட்டுகளை வீசுபவர்களைக் கண்டித்து ஃபத்வா ஒன்றை வெளியிட்டார். ஆனால், இப்போதும் கூட காஸா மக்கள் பலரும் ஹமாஸுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

சின்வார் கொலையும் போர்நிறுத்தமும்:

கடந்த ஆண்டில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்களில் சலே அல்-அரூரியும் அடங்குவர். ஹமாஸின் முக்கியப் பொறுப்பில் இருந்த இவர் ஜனவரி மாதம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசா, சின்வாரின் நெருங்கிய உதவியாளரான டெய்ஃப் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 7, 2023 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட ​​கடந்த அக்டோபர் 17 அன்று கொல்லப்பட்டார். அன்றே போர் முடிவடைய வாய்ப்பு இருப்பதாக பலரும் நினைத்தனர். ஆனால், இஸ்ரேல் போரை நிறுத்த விரும்பவில்லை.

யாஹ்யா சின்வார்

காஸாவில் நடைபெறும் போரில் சின்வாரின் மரணம் ஒரு முக்கியமான தருணமாக கருதப்பட்டாலும், மோதல் முடிவுக்கு வரவில்லை என்பதை நெதன்யாகு தெளிவுபடுத்தினார். அவர் தனது எக்ஸ் பதிவில், "இது காஸாவில் போரின் முடிவு அல்ல. முடிவின் ஆரம்பம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், இஸ்ரேல் அமைச்சரவையைச் சேர்ந்த பென்னி காண்ட்ஸ், ”இஸ்ரேலியப் படைகள் காஸாவில் வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர்ந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், ஐ.நா வின் நிவாரண உதவி நடவடிக்கைகள் மீதான இஸ்ரேலின் தடை வரும் புத்தாண்டில் நடைமுறைக்கு வரும்போது காஸாவில் ஏற்கனவே இருக்கும் அழிவு நிலை இன்னும் மோசமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தோல்வியில் முடியும் பேச்சுவார்த்தைகள்:

கடந்த டிசம்பர் 11 அன்று, ஐநா சபை இரண்டு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. அது, காஸாவில் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்பதாகும்.

பலகட்டமாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.

காஸாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் ஹமாஸ் அமைப்பின் செயல்பாடுகளை இஸ்ரேல் கட்டுக்குள் கொண்டுவரும் என்று அவர்கள் அச்சப்படுகின்றனர்.

காஸாவின் நுஸ்ரேத் பகுதியில் இருந்த அகதிகள் முகாம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது.

ஆனால், காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒருங்கிணைய வாய்ப்பு உண்டாகும் என்ற காரணத்தால் இஸ்ரேல் வெளியேற மறுக்கிறது. இது, தொடர்ந்து மோதல் போக்கினை அதிகரித்து வருகிறது.

ஹமாஸ் இஸ்ரேலின் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் உள்ளிட்ட பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். போர்நிறுத்தத்திற்கு உடன்படுவதற்கு முன்பு அவர்களை விடுவிக்க இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் ஒத்துப்போகும் தன்மை இல்லாதது பிரச்னையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பிற சர்வதேச நாடுகளின் தலையீடு இருந்தபோதிலும், இந்தப் பிரச்னையின் தீவிரத்தன்மை குறையாமல் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

2025 புத்தாண்டு வரவிருக்கும் நேரத்தில் இந்தப் போர் தொடர்பாக ஒரு சுமூகமான தீர்வை எட்டாவிடில் தொடர்ந்து அப்பாவி மக்களின் உயிர்களை விலையாகக் கொடுக்கப்படுவது தவிர்க்கமுடியாது.

இந்த ஆண்டு முழுவதும் வெடிகுண்டுச் சத்தங்களை மட்டுமே கேட்டு அச்சுறுத்தல்களுக்குப் பழகிய காஸா மக்கள் அதிலிருந்து மீண்டுவர எத்தனை காலம் ஆகும் என்று தெரியவில்லை.

2024 - கௌதம் கம்பீர் வருகை! இந்திய அணிக்கு எழுச்சியா? வீழ்ச்சியா?

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வருகை இந்திய அணிக்கு எழுச்சியா.. வீழ்ச்சியா? என்பதைப் பற்றி ஒரு கிரிக்கெட் ரசிகனின் பார்வையில்!2024! ஆஹா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அற்புதமான ஆண்டாகவே அமைந்தத... மேலும் பார்க்க

2024 - பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

2024!உலகம் முழுவதும் ‘தேர்தல்களின் ஆண்டு’ அழைக்கப்பட்ட நிகழாண்டில் இந்தியா மட்டுமின்றி, எங்கெங்கு காணினும் பிரசாரங்களும் பேரணிகளும் அணி வகுத்திருந்தன என்று கூறினால் யாரும் மறுக்கமாட்டார்கள். இந்தியாவி... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ – கியூபாவில் மான்கடா ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் தோல்வியுற்ற நிலையில் கைது செய்யப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயத்துக்காகப் பேசிய உலக வரலாற்று... மேலும் பார்க்க

2024 - இந்தியத் தேர்தல் களத்தில் வென்றதும் வீழ்ந்ததும்!

2024! யாருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததோ, இல்லையோ? இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மிக முக்கியமான ஆண்டாகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்.. அனைவரும் எதிர்பார்த்திருந்த மக்களவைத் தேர்தல் ஒருபுறம்,... மேலும் பார்க்க

அதிகாரத்திற்கு அடங்காத போராளி கவிஞர் ஹபீப் ஜாலிப்! கவிதைதான் குற்றம்- 10

‘ஒன்று இரண்டானது; இரண்டு, துண்டாகி மூன்றானது’ என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் 1947 ஆகஸ்டுக்குப் பிந்தைய நிகழ்வுகளின் மிகச் சுருக்கமான, ஒற்றைவரி அரசியல் வரலாறு. காலங்காலமாக ஒன்றாக இருந்தாலும் ஒன்றிணைய... மேலும் பார்க்க

நானறிந்த மன்மோகன் சிங்

எம்.ஆா். சிவராமன் மன்மோகன் சிங் என்னை 1978-இல் பொருளாதார விவகாரத் துறை இயக்குநராக நியமிக்கச் செய்தாா். சில மாதங்களுக்குப் பிறகு, 1979 டிசம்பரில், என் அறைக்கு வந்த அவா், எப்போது இணைச் செயலாளராகப் போகி... மேலும் பார்க்க