மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மன்மோகன் சிங் பெயர்: மோடிக்கு கடிதம்!
மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய மாணவர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
தில்லி பல்கலைக்கழகத்துக்கு கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்துவைக்கவுள்ளார். அந்த இரு கட்டடங்களுக்கும் சாவர்க்கர் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தில்லி பல்கலைக்கழக கட்டடத்துக்கு மன்மோகன் சிங் பெயர் வைக்க வேண்டும் என்று தேசிய மாணவர் சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதையும் படிக்க : தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!
பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் சாவர்க்கர் பெயர் சூட்டப்பட்ட கட்டடங்களை நீங்கள் திறக்கவுள்ளீர்கள். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரை கல்வி நிறுவனத்துக்கு சூட்ட வேண்டும் என்று தேசிய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
அவரது மறைவு ஆழமான வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. அவரின் பெயரில் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களை அர்ப்பணிப்பதே அவரது பணிகளுக்கு செலுத்தும் பொருத்தமாக அஞ்சலியாக இருக்கும்.
நாடு முழுவதும் ஐஐடி, ஐஐஎம்எஸ், எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்களை விரிவுப்படுத்தி கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி லட்சக்கணக்கானோரை பயனடைய வைத்தவர் மன்மோகன் சிங்.
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள உலகத் தரம் வாய்ந்த கல்லூரிக்கும், ஒரு மத்திய பல்கலைக்கழகத்துக்கும் மன்மோகன் சிங் பெயரை சூட்ட வேண்டும்.
அவரின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
இந்தியாவுக்கான அவரது ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.