செய்திகள் :

2024 - கௌதம் கம்பீர் வருகை! இந்திய அணிக்கு எழுச்சியா? வீழ்ச்சியா?

post image

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வருகை இந்திய அணிக்கு எழுச்சியா.. வீழ்ச்சியா? என்பதைப் பற்றி ஒரு கிரிக்கெட் ரசிகனின் பார்வையில்!

2024! ஆஹா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அற்புதமான ஆண்டாகவே அமைந்தது.

ஜனவரி மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து டிசம்பரில் நிறைவடைந்த பாக்ஸிங் டே டெஸ்ட் வரை ஒரே கொண்டாட்டமாகவே இருந்தது.

அதனிடையே அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வென்று 17 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

இந்திய அணியின் வெற்றிக்குத் தூணாகவும், இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவருமான (the wall) ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் அதனுடன் முடிவுக்கு வந்தது. இந்திய வீரர்களோ அவருக்கு வெற்றியுடன் பிரியாவிடை அளித்தனர். இதனால், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் மத்தியில் யார் அடுத்து இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வருவார் என்று அதிக எதிர்பார்ப்பு உருவானது.

கம்பீருக்கு அடித்த அதிர்ஷ்டம்

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துப் போட்டிகளிலும் முன்னணியில் இருக்கும் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் பயிற்சியாளராக வரவேண்டும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு 3 ஒருநாள் உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை என வென்று தந்த ரிக்கி பாண்டிங், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃபிளமிங் மட்டுமின்றி இந்திய முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர் போட்டியில் வரிசைகட்டி நின்றுகொண்டிருந்தனர்.

இருப்பினும், கௌதம் கம்பீருக்கு அந்த வாய்ப்பு வாயிற் கதவைத் தட்டிக் கொண்டுவந்தது. ஆம்! இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு முன்னாள் வீரர் கௌதம் கம்பீருக்கு வழங்கப்பட்டது.

கௌதம் கம்பீர்! யாருக்குதான் தெரியாது இவரை! 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் கறைபடிந்த சீருடையுடன், கோப்பையை வென்று சச்சின் டெண்டுல்கரை மட்டுமல்ல, அந்தப் போட்டியில் இந்திய அணியையும் தனது தோளில் தாங்கியிருந்தார். அதற்கு முன்னதாக, 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கௌதம் கம்பீர் 75 ரன்கள் விளாசி, அப்போதும் இந்திய அணி முதல்முறையாக கோப்பை வெல்வதற்கான அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது.

2007, 2011 என இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களிலும் அதிக ரன்கள் விளாசியிருந்தாலும், தோனியின் புகழ், அவருக்கான பாராட்டுக்களைத் தட்டிப்பறித்தது என்றுதான் கூறவேண்டும்.

அதிகம் பாராட்டப்படாதவர், கொஞ்சம் கோபக்காரர், ஆஸ்திரேலிய வீரர்களைப் போன்ற சாம்பியன் மனநிலை கொண்டவர், சிடுமூஞ்சியான இவர் சிரித்துக்கூட பார்த்ததில்லை. இவர் எப்படி இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியாளராக பயணிக்கப் போகிறார் என்று அனைவரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இது குறித்து கம்பீர் ஒரு நேர்காணலில் கூறும்போது, “நான் சிரிப்பதை பார்ப்பதற்கு யாரும் மைதானத்துக்கு வருவதில்லை. அவர்கள் என் வெற்றியைப் பார்க்க வருகிறார்கள்” எனக் கூறியிருந்தார்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கம்பீரின் வருகை, உலகளவில் அதிக வருவாய்மிக்க, பெரிய கிரிக்கெட் அணியான இந்தியாவுக்கு முக்கியமாகவே கருதப்பட்டது.

கம்பீர் பயிற்சியாளராக வரும்போது கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும், தரவரிசைப் பட்டியலில் மட்டுமின்றி, உலகக் கோப்பையையும் வென்ற சாம்பியன் அணியாக இந்திய அணி திகழ்ந்துக்கொண்டிருந்தது.

கம்பீர் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உலகக் கோப்பை பசியையும், தாகத்தையும் போக்கக்கூடிய ஒரு கடவுளாக இருக்க வேண்டியதில்லை. மேலும், இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும், அவருக்கு அந்தக் கடவுள் என்னும் பட்டம் கிடைக்கவும் போவதில்லை. இருந்தாலும், அவரால் வெற்றிகரமான பயிற்சியாளராக வேண்டுமானால் இருக்கலாம் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும்.

“வெற்றி பெறுவது எளிது, ஆனால், அந்த வெற்றியைத் தக்கவைப்பது மிகக் கடினம்” என்ற சொலவடை இருக்கிறது.

இந்திய அணிக்கு தொடர்ச்சியாக வெற்றியைத் தேடித்தர வேண்டாம். ஆனால், தோல்விப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிடக் கூடாது என்பதில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

காரணம், கௌதம் கம்பீரின் அணுகுமுறையே வித்தியாசமானது. உதாரணத்திற்கு கொல்கத்தா அணியில் கேப்டனாக இருந்த போது சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனை ஓப்பனிங் வரிசையில் பேட்டிங் ஆடவைத்ததில் அவரின் பங்கு மிக முக்கியமானதே.

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கௌதம் கம்பீர் ஆலோசனையின் கீழ் கோப்பையை வென்றதால் மட்டுமே, அவருக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டது என்று கூறினாலும், ஆளும் பாஜக அரசின் மக்களவை எம்பியாக இருந்ததும் (தில்லி கிழக்கு தொகுதி), தில்லி விளையாட்டு சங்கத் தலைவரும், மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனுமான ரோஹன் ஜெட்லியின் சிபாரிசு ஆகியவை முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் அனைவரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

அது ஒருபுறம் இருக்க, தான் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு கம்பீர் பல்வேறு நிபந்தனைகளை விதித்தார் என்று அப்போது கூறப்பட்டது. கௌதம் கம்பீர் டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பயிற்சி அளிப்பார். ஆனால், டெஸ்ட் போட்டியில் அவ்வளவாக அவருக்கு அனுபவம் கிடையாது என்று பலரும் கூறினர்.

அதனை நிரூபிக்கும் வகையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பட்டையைக் கிளப்பிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல, ஒருநாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் இலங்கை மண்ணில் தொடரை இழந்து 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.

ஆனால், அதன் பின்னர் இந்தியாவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் முழுமையாக வென்றது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 297 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தது நினைவிருக்கலாம்!

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அதிவேக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்களை பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. பயிற்சியாளர் கம்பீர் புகழும் உச்சத்துக்குச் சென்றது.

வீழ்ச்சிப் பாதையில்

‘ரோலர் கோஸ்டர்’ போல மிக வேகமாக மேலே சென்ற கம்பீரின் புகழ் அதே வேகத்தில் கீழிறங்கியது என்று கூறினால் யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஆம்! நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில்கூட வெல்ல முடியாத இந்திய அணி முழுமையாக தொடரை இழந்து ஒயிட்வாஸ் ஆனது.

24 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக ஒயிட்வாஸ் ஆன இந்திய அணி, 12 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துக்கு எதிராக தொடரை இழந்ததும் அதுதான் முதல்முறை. [இது 12 வருடங்களாக, 18 தொடர்களில் தோல்வியடையாமல் 4331 நாள்கள் பாதுகாத்து வந்த பெருமையையும்கூட இழந்தது]

அது மட்டுமா முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்தியா தனது சொந்த மண்ணில், மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே தோல்வியடைந்ததையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வான போது “வாத்தி கம்மிங், மாஸ்டர் வந்துவிட்டார், இனி கலக்கல்தான், ராணுவத்துக்கு இணையான பயிற்சி..” என வாட்ஸ்-அப்பில் ஃபயர் விட்டவர்களும், முகநூலில் கட்டுரைகள் எழுதியவர்களும் அவருக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்பது சோகத்தின் சோகம்!

இந்திய ஆடுகளங்கள் தயாரிப்பில் இருந்து அணித்தேர்வு வரை அனைத்திலும் தலைமைப் பயிற்சியாளரின் தலையீடு இருப்பதாக கௌதம் கம்பீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இப்படியான சூழலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் தொடரின் முடிவுகள் இந்திய அணிக்கு எதிராக அமையும் பட்சத்தில் பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீர் நீக்கப்படுவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக, கம்பீர் சிவப்பு பந்து (டெஸ்ட்) கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே நீக்கப்பட்டுவார் என்றும், மற்ற தொடர்களில் பயிற்சியாளராக நீடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் பயிற்சியாளராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதுவரை நடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்து ரன்னர்-அப்பாக இருந்தது. ஆனால், தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கிட்டத்தட்ட மங்கிவிட்டது என்றே கூறலாம்.

முதல் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளித்த இந்திய அணி, அடுத்த போட்டியிலேயே தோல்வியைத் தழுவியது.

முடிச்சு விட்டிங்க.. போங்க..!

கம்பீரின் வெற்றி - தோல்விக்கான கோட்டுரு (graph) மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. இதில், குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டியது இந்திய அணி மோதிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிட்டத்தட்ட தோல்வியைத் தழுவும் நிலையில், 10 வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜஸ்பிரித் பும்ரா - ஆகாஷ் தீப் இருவரும் இந்திய அணியை ஃபாலோ-ஆன் ஆகாமல் காப்பாற்றினர். இதனால், இந்திய அணியை போட்டியை டிரா செய்தது.

இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்த்தபோது, பயிற்சியாளர் கம்பீர், விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா அனைவரும் பெவிலியனில் இருந்து கொண்டாடியவிதம் 5 ஐசிசி கோப்பைகளை ஒரே நேரத்தில் வென்ற அணிகளே தோற்றுவிடும்.

ஃபாலோ -ஆனை தவிர்த்ததில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது. இப்படி கொண்டாடுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கும். அதற்கு இந்திய அணியின் கடந்த கால வரலாறுகள் சான்றாக இருக்கின்றன.

கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் இந்தியா ஃபாலோ ஆன் பெற்றது. அதன்பிறகு கடந்த 13 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஃபாலோ-ஆன் பெற்றதில்லை என்ற பெருமையோடு இருக்கிறது. அதனால், அந்தக் கொண்டாட்டம்!

“ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்” என்றொரு துருக்கிய பழமொழி இருக்கிறது. அதைத்தான் கௌதம் கம்பீர் நிதர்சனமாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணியில் இருக்கும் மூத்த வீரர்களுக்கும் கம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவதாகவும், அஸ்வினின் ஓய்வுக்கு முக்கியமான காரணமாக கௌதம் கம்பீராகத்தான் இருக்க முடியும் எனவும் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், இந்திய அணியில் அணித் தேர்வு, வீரர்களை எந்த வரிசையில் விளையாட வைப்பது போன்ற குழப்பங்கள் இந்திய அணியை வீழ்ச்சிக்கான பாதையை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் கே.எல். ராகுலை 6 வது வீரராக விளையாடவைப்பது, நன்றாக விளையாடினாலும் சர்ஃப்ராஸ் கான் போன்ற வீரரை அணியில் விளையாட வைக்காமலிருப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கம்பீர் மீது வைக்கப்படுகிறது. ஆனால், இவை அனைத்தும் கேப்டனின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்பது அனைவரும் அறிந்ததே!

ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியால் மட்டுமே கம்பீருக்கு பயிற்சியாளர் பதவி கிடைத்தது என்று கூறினாலும், கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் இந்திய வீரரும், கேகேஆர் தலைமைப் பயிற்சியாளருமான சந்திரகாந்த் பண்டிட்.

யார் இந்த சந்திரகாந்த் பண்டிட்?

சந்திரகாந்த் பண்டிட் இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்டராக 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உள்ளூர் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட், 6 முறை ரஞ்சி கோப்பைகளை வென்றவர்.

சந்திரகாந்த் பண்டிட்டுடன் கௌதம் கம்பீர்

நிகழாண்டிலும் அவரின் தலைமையிலான மத்தியப் பிரதேச அணி, சையத் முஷ்டாக் அலி தொடர் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. நியாயமாகப் பார்த்தால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி சந்திரகாந்த் பண்டிட்டுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தாலும், கம்பீருக்கான பரிந்துரை மேலிடத்தில் அதிகமாகவே இருக்கிறது.

முதல் முறையல்ல!

இதுவரை கம்பீரின் தலைமையில் இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் 4 தோல்வி, 3 வெற்றி, ஒரு சமனுடன் பரிதாபமான நிலையில் இருக்கிறது.

கம்பீரைப் போன்ற ஒரு பயிற்சியாளர் இவ்வாறு தொடர்ந்து சொதப்பி வருவது இது முதல் முறை கிடையாது. ஜான் ரைட், கேரி கிரிஸ்டன் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரின் தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், கிரெக் சேப்பல் மற்றும் அனில் கும்ப்ளே பதவிக்காலத்தில் இந்திய அணி மிக மோசமான தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.

2011 ஆம் ஆண்டில் டங்கன் பிளெட்சர் பொறுப்பேற்ற பின்னர் அவரின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய அணி 11 டெஸ்ட்டில் (இங்கிலாந்தில் 7 மற்றும் ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகள்) தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மீள்வாரா கம்பீர்?

எதுவாக இருந்தால் என்ன, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணிக்கான வாய்ப்பு மங்கிவிட்டது. ஆனால், தனது திறமை என்ன? என்பதை நிரூபிக்க 2027 ஆம் ஆண்டு வரை கௌதம் கம்பீருக்கு காலம் இருக்கிறது. மேலும், அடுத்தாண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை, 2026 ஆம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பை, 2027 ஆம் ஆண்டு 50 உலகக் கோப்பை என அடுத்தடுத்த தொடர்களும் காத்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி, அவரின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், இந்திய அணி 19 டெஸ்ட், 44 டி20, 30 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவிருக்கிறது.

தற்போதைய இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருந்தாலும், இந்திய அணி 50 ஓவர் ஐசிசி கோப்பை வென்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதன் பின், 50 ஓவர் உலகக் கோப்பை கனவு நிறைவேறாத கனவாகவே இருந்துவருகிறது.

அதே ஏக்கத்துடன் 2025 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கவுள்ளோம். 50 ஒவர் உலகக் கோப்பையை வெல்வோம் என்ற கனவு நிஜமாகும் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில் கம்பீர் அதை வென்று, தன் மீதான விமர்சனங்களுக்கு விடையளிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2024 - பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

2024!உலகம் முழுவதும் ‘தேர்தல்களின் ஆண்டு’ அழைக்கப்பட்ட நிகழாண்டில் இந்தியா மட்டுமின்றி, எங்கெங்கு காணினும் பிரசாரங்களும் பேரணிகளும் அணி வகுத்திருந்தன என்று கூறினால் யாரும் மறுக்கமாட்டார்கள். இந்தியாவி... மேலும் பார்க்க

2024 - போரும் படுகொலைகளும்... காஸாவில் தொடரும் துயரம்!

2024 ஆம் ஆண்டில் பல முக்கிய அரசியல் திருப்புமுனைகளும் போர்களும் உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ளன. அரசு அதிகாரங்களின் மோதல் போக்குகளால் தொடர்ந்து உலகம் முழுக்க மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், மி... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ – கியூபாவில் மான்கடா ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் தோல்வியுற்ற நிலையில் கைது செய்யப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயத்துக்காகப் பேசிய உலக வரலாற்று... மேலும் பார்க்க

2024 - இந்தியத் தேர்தல் களத்தில் வென்றதும் வீழ்ந்ததும்!

2024! யாருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததோ, இல்லையோ? இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மிக முக்கியமான ஆண்டாகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்.. அனைவரும் எதிர்பார்த்திருந்த மக்களவைத் தேர்தல் ஒருபுறம்,... மேலும் பார்க்க

அதிகாரத்திற்கு அடங்காத போராளி கவிஞர் ஹபீப் ஜாலிப்! கவிதைதான் குற்றம்- 10

‘ஒன்று இரண்டானது; இரண்டு, துண்டாகி மூன்றானது’ என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் 1947 ஆகஸ்டுக்குப் பிந்தைய நிகழ்வுகளின் மிகச் சுருக்கமான, ஒற்றைவரி அரசியல் வரலாறு. காலங்காலமாக ஒன்றாக இருந்தாலும் ஒன்றிணைய... மேலும் பார்க்க

நானறிந்த மன்மோகன் சிங்

எம்.ஆா். சிவராமன் மன்மோகன் சிங் என்னை 1978-இல் பொருளாதார விவகாரத் துறை இயக்குநராக நியமிக்கச் செய்தாா். சில மாதங்களுக்குப் பிறகு, 1979 டிசம்பரில், என் அறைக்கு வந்த அவா், எப்போது இணைச் செயலாளராகப் போகி... மேலும் பார்க்க