மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று இந்தியா வருகை!
மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (ஜன.2) இந்தியா வருகிறார்.
இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவு நாடான மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று (ஜன.2) மாலை புதுதில்லியைச் சென்றடைகிறார். பின்னர் நாளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருடன் அவர் கலந்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மாலத்தீவின் சுகாதாரத் துறை அமைச்சராக செயல்பட்ட அப்துல்லா கலீல், கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்நாட்டு அதிபர் முஹம்மது முயீஸூவினால் வெளியுறவுத் துறை இலாக்காவிற்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிக்க: பாக்: மே.9 கலவரத்தின் குற்றவாளிகள் 19 பேரின் கருணை மனு ஏற்பு!
முன்னதாக, கடந்த அக்டோபரில் இந்தியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக வந்த மாலத்தீவின் அதிபர் முயீஸூவுடன் கலீலும் வந்திருந்தார்.
அந்த சந்திப்பில் இரு நாட்டு உறவு மேம்படும் அளவிலான விவாதாங்களும் ஆலோசனைகளும் நடைபெற்றதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சுற்றுலாத்துறையை மையமாக கொண்ட மாலத்தீவு நாட்டின் பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய மக்களின் பங்களிப்பினால் அது விரைவாக மீண்டதாக அவர் அப்போது புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது