தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினரால் சுட்டுக்கொலை!
பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிகார் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் ஆயுதம் ஏந்திய கொள்ளைப் போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக சுசில் மோச்சில் என்பவரை ரூ.2 லட்சம் சன்மானம் அறிவித்து காவல் துறையினர் தேடி வந்தனர்.
கடந்த சில நாள்களாக சிறப்பு அதிரடிப் படையினர் அவரது நடமாட்டங்களை கவனித்து வந்த நிலையில், நேற்று (ஜன.3) இரவு அவர்களுக்கு சுசில் பயிசி பகுதியில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையும் படிக்க:கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 5 வயது சிறுவன் பலி
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது காவல் துறையினர் அவரை சுற்றிவளைத்திருப்பதை உணர்ந்த சுசில் அவர்களை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர், காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.