செய்திகள் :

ஆளுநருக்கு எதிராக திமுக நாளை(ஜன. 7) கண்டன ஆர்ப்பாட்டம்!

post image

தமிழ்நாட்டில் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து நாளை(செவ்வாய்க்கிழமை) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும்
அவரைக் காப்பாற்றும் அதிமுக - பாஜக கூட்டணியையும் கண்டித்து திமுக சார்பில் ஜன. 7 ((செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சட்டப்பேரவை மரபை மாற்ற முடியாது! நடந்தது என்ன? - அப்பாவு பேட்டி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு.

ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2023-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது, மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை.

’அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவை குறிப்பில் இடம்பெறும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே நேருக்கு நேர் பதிலடி கொடுத்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

2024-ம் ஆண்டு ஆளுநர் உரையின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ரவி. இந்த ஆண்டும் அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார்.

தொடக்கத்தில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உரையை படிக்காமல் வெளியேறியதாக ஆளுநர் அளித்த விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

சில மாதங்கள் முன்பு பிரசார் பாரதியின் இந்தி மாத விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது. இப்போது தேசிய கீதம் முதலில் பாடவில்லை என சொல்லி மறைமுகமாக தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் எதிர்த்திருக்கிறார். அன்று தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்பதை விடுத்துவிட்டு பாடி நமது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தார். இன்று சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதை சகித்துக்கொள்ளாமல் ஆளுநர் ரவி, தேசிய கீதம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு உடனடியாக சபையை விட்டு வெளியேறி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருக்கிறார். தேசிய கீதத்தை சட்டமன்றம் அவமதித்துவிட்டதாக தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்.

ஆளுநர் உரையின் போது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் பாடப்பட்டு வருவதுதான் நடைமுறை. இதனை தகர்ந்து ஆளுநர் ஒருவரே நடந்து கொள்கிறார் என்றால், அது அரசியல் அல்லாமல் என்னவாக இருக்க முடியும்? முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படும் நடைமுறை ஆளுநர் ஆர்.என்ரவி அவர்களுக்கு தெரிவில்லை என்றால், இதற்கு முன்பு இருந்த பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இப்படியான மோதல் போக்குகள் காரணமாகத்தான் பாஜக ஆளாத பல மாநிலங்களில் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைக்காத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தெலங்கானாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுநராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவரை அழைக்கவே இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஜனநாயக மாண்பை கடைபிடிக்கும் வகையில் ஆளுநரை அழைக்கிறோம். அரசியல் சாசன சட்டப்படி ஆளுநருக்கு தரவேண்டிய மரியாதையை திமுக அரசு அளித்து வருகிறது. ஆனால், ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் சட்டப்பேரவை மாண்பையும் குலைக்கும் வகையில் நடந்து வருகிறார். 

மாநிலங்களின் தனித்த அடையாளங்களை அழித்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே பண்பாடு என்ற ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவந்து மாநில சுயாட்சியை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு ஆளுநரை கருவியாக பயன்படுத்த முயல்கிறார்கள். மாநில சுயாட்சியை உயிர் கொள்கையாக தூக்கிப் பிடிக்கும் திமுக அதை ஒருக்காலும் அனுமதிக்காது. மாநில சுயசாட்சியை பறிக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சியை முதலமைச்சர் அரணாக இருந்து தடுத்து நிறுத்துவார். திமுக சுவரைத் தாண்டி ஆளுநரும் நுழைய முடியாது, ஆரியமும்  நுழையவிட மாட்டோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தனித்து செயல்படுவது மக்களாட்சியை அவமதிக்கும் செயல். இந்திய அரசியல் சாசனத்திற்கே எதிரானதாகும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன பதவியில் இருக்கும் ஒருவர், தன்னை சர்வாதிகாரியாக நினைத்து கொண்டு மக்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அடக்கி ஆளலாம் என்ற அற்ப ஆசையோடு நடந்து வருகிறார் ஆளுநர் ரவி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உறுதுணையாக இருந்து மாநில வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உறவுப் பாலமாகத் திகழ வேண்டியவர், மத்திய அரசின் ஏஜென்டாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு நலனை கெடுக்கும் விதமாக நடந்து வருகிறார் ஆளுநர் ரவி.

பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் தங்களால் வெல்ல முடியாத மாநிலங்களில் எல்லாம் இப்படி ஆளுநர் மூலம் முட்டுக்கட்டை போட்டு நெருக்கடி கொடுத்து மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்கப்பார்க்கிறது. மேற்கு வங்கம், கேரளம், தில்லி, பஞ்சாப் என எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் அத்தனை மாநிலங்களிலும் ஆளுநர்களை ஏவி விட்டு மாநில சுயாட்சியை பறித்து வருகிறது பாஜக அரசு.  மாநில சுயாட்சியை நசுக்கி மத்திய அரசு மூலம் ஒற்றை ஆட்சியை நடத்தவே பாஜக அரசு விரும்புகிறது. இதை ஒருக்காலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது குஜராத் இந்தூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் 2012 மார்ச் 4-ம் தேதி ஆளுநர் பற்றிய கருத்து ஒன்றை தெரிவித்தார். ‘‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் புஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது. ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது’’ என்றார் மோடி.

அந்த மோடிதான் பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக நியமித்தார். தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளி மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த போதுதான் பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோர்த்து இணைத்து வைத்தார்.

குஜராத் முதல்வராக மோடி இருந்த போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு, லோக் ஆயுக்தா விவகாரங்களில் ஆளுநர் கமலா பெனிவாலுடன் மல்லுக் கட்டினார். இதனால் கோபம் அடைந்த முதல்வர் மோடி மாநில உரிமையை நிலைநாட்ட அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பினார். ‘கூட்டாட்சிக் கொள்கைகளை மீறும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும்’ என்று கடிதத்தில் மோடி குறிப்பிட்டிருந்தார். அந்த மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் இடையூறு செய்து வருகிறார்.

எத்தனை இடையூறுகள் வந்தாலும் மாநில உரிமை, மாநில சுயாட்சியை விட்டு கொடுக்காத மண் தமிழ் மண்.

மாநில உரிமை, மாநில சுயாட்சி, மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி போன்ற விவகாரங்களை எல்லாம் முன்வைத்து மத்திய அரசுடன் திமுக போராடிக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் ஏஜெண்ட்டாக செயல்படும் ஆளுநரை காப்பாற்றவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு  மக்களின் கோபத்தை திசைமாற்றும் வகையிலும் அதிமுக-பாஜக கூட்டணி வித்தைகளை காட்டிக் கொண்டிருக்கிறது.

திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்றைக்குமே மாநில உரிமைகளையும் தமிழ்நாட்டு மக்களின் நலனையும் விட்டுக் கொடுக்காது.

தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு  மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் “மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

மாநில உரிமையில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத, தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காத ஆளுநர் ரவியை உடனடியாக குடியரசுத்தலைவர் திரும்பப் பெற வேண்டும்.

'ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” என நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்' என்று பதிவிட்டுள்ளார்.

ஜன. 11-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ஜன. 11 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப... மேலும் பார்க்க

கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!

துபையில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் கார் சேதமடைந்த போதும் நடிகர் காயமின்றி உயிர் தப்பினார்.Ajith Kumar’s massive crash in p... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மத்திய அரசின் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? நாளை முக்கியக் கூட்டம்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎ... மேலும் பார்க்க

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்க... மேலும் பார்க்க