ஈக்வடார் நாட்டில் அவசரநிலை பிரகடனம்!
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் 7 மாகாணங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மோதல்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவமும் காவல் துறையும் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (ஜன.4) முதல் அடுத்த 60 நாள்களுக்கு 7 மாகாணங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அந்நாட்டில் பெருகி வரும் குற்றங்களும் ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களும்தான் இந்த அவசர நிலைக்கு முக்கிய காரணம் என்றும் சட்டம் ஒழுங்கை சீராக்க ராணுவமும் காவல் துறையும் பயங்கர நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:மியான்மர்: சுதந்திர நாளை முன்னிட்டு 6,000 கைதிகள் விடுதலை!
இந்த அவசர நிலையின் அடிப்படையில், 7 மாகாணங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் உள்ள வீடுகளில் எப்போது வேண்டுமானாலும் சோதனை மேற்கொள்ள அங்குள்ள மக்களின் தனியுரிமை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 மண்டலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமலபடுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈக்வாடார் நாட்டில் ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதம் ஏந்திய 22 கும்பல்களை அந்நாட்டு அரசு தீவிரவாதிகள் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.