மறைந்த திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு ரூ. 1.06 கோடி குடும்ப நல நிதியுதவி
வட கொரியாவுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள ரஷியா ஆயத்தம் -அமெரிக்கா
சியோல்(தென் கொரியா): தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் விண்வெளித்துறை சார் நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதில் வட கொரியா ரஷியாவுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள யூன் சுக் இயோலை கைது செய்ய தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராகப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தென் கொரியாவில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று(ஜன. 6) தென் கொரிய எல்லையைத் தாண்டி வட கொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதிர்ச்சியளித்துள்ளது.
இதனிடையே, தென் கொரிய வெளியுற அமைச்சர் சோ தே-யுல்லும், ஆண்டனி பிளிங்கனும் இணைந்து திங்கள்கிழமை(ஜன. 6) கூட்டாக செய்தியாளர்களுடன் பேசியபோது வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்தனர். அதேபோல, அமெரிக்கா, தென் கொரியாவுக்கு மிக நெருக்கமாகப் பணியாற்றி வரும் ஜப்பானும் வட கொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான சண்டையில் ரஷியாவுக்கு வட கொரியா அளித்து வரும் உதவிக்கு சன்மானமாக, ரஷியா வட கொரியாவுக்கு அளித்துவரும் ஆதரவை மேலும் ஒருபடி அதிகரித்திருப்பதாக ஆண்டனி பிளிங்கன் தென் கொரியாவில் தெரிவித்தார். “வட கொரியா ஏற்கெனவே ரஷியாவிடமிருந்து ராணுவ உபகரணங்களைப் பெற்று வருகிறது. மேலும், ராணுவப் பயிற்சியையும் பெறுகிறது. இந்த நிலையில், வட கொரியாவுக்கு விண்வெளி துறை சார் செயற்கைக் கோள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க ரஷியா ஆயத்தமாகி வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவின் இடைக்கால அதிபராக உள்ள அந்நாட்டின் பிரதமர் சோஇ சங்-மோக்கையும் சந்தித்து பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அமெரிக்காவுடனான தங்கள் நாட்டு உறவை வலுப்படுத்த தேவையான பங்களிப்பை அளிக்க தயாராக இருப்பதாக தென் கொரிய அதிபர் மாளிகை உறுதியளித்துள்ளது.