நாளை ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு: இஸ்ரோ தகவல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (ஜன.9) நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
‘பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்’ எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலின் கீழ் தனியாா் நிறுவனம் வடிவமைத்தது.
அந்த இரட்டை விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து கடந்த 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த விண்கலன்கள் புவியிலிருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொலைவு படிப்படியாக 20 கி.மீ. குறைக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
அந்த நிகழ்வு வரும் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்திலிருந்து மற்றொன்றுக்கு அவா்கள் மாறுவதற்கும், எரிபொருளை மாற்றிக் கொள்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படும்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும்பட்சத்தில் அமெரிக்காவைப் போன்று விண்வெளியில் இந்தியாவாலும் ஆய்வு மையத்தை அமைக்க முடியும்.