மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
`திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது...' - செல்லூர் ராஜூ விமர்சனம்
"கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு திமுக-வின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்..." என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை புதுவிளாங்குடி பகுதியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "என் மகன் தமிழ்மணி பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பில் கண் சிகிச்சை மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்த விளாங்குடி அரசுப் பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலரிடம் ஒரு வாரத்திற்கு முன்பு கேட்டபோது அனுமதி கொடுத்தார்.
ஆனால், திடீரென பள்ளியில் மருத்துவ முகாம் நடத்த அனுமதிக்கு முடியாது என மாவட்ட கல்வி அலுவலர் கூறுகிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் பொதுவான நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழலை திமுக-வினர் உருவாக்கி உள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் திமுக-வினர் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். ஆட்சி மாறும், இந்த காட்சிகளும் மாறும்" என்றவர், தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது,
"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியும். அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே 'யார் அந்த சார்?' என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஜனநாயக முறைப்படி செயல்படுகிறதா? அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளதா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அதற்கு திமுகவின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்.
தூக்கம் வரவில்லை, சவுக்கை எடுப்பேன், சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் முன்பு பேசினார். ஆனால், இப்போது அன்புச் சகோதரர் அண்ணாமலைதான் சாட்டையால் தன்னையே அடித்து வருத்திக்கொண்டார்.
கே.பாலகிருஷ்ணன் பேசியதற்கு, 'வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம்' என அமைச்சர் சேகர்பாபு மிக மோசமான முறையில் பேசி உள்ளார். தனிப்பட்ட முறையில் கே.பாலகிருஷ்ணன் நேர்மையானவர், யாரிடமும் பணம் வாங்க மாட்டார். ஆனால், இதுபோல் பேசினால் கம்யூனிஸ்ட் கட்சி பெட்டி வாங்கியதாகத்தான் மக்கள் நினைப்பார்கள். திமுக, கம்யூனிஸ்ட் கட்சியை எப்படி வைத்திருக்கிறார்கள் என்பது சேகர்பாபு பேச்சு மூலம் தெரிகிறது.
திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். கம்யூனிஸ்ட் கட்சியும் அதையே சொல்கிறது. திமுக கூட்டணியில் பயணம் செய்பவர்கள், மக்களின் எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டி இருக்கும், திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பெரும்பாலும் திமுக-வினரே சம்பந்தப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதுபோல அண்னா பல்கலைக்கழக மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஞானசேகரன் அமைச்சர்களோடு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார், மாலை நேரத்தில் பிரியாணி கடை நடத்தியவர், இரவு நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்வது, வீடு புகுந்து திருடுவது என்று இருந்திருக்கிறார். ஞானசேகரன் மட்டும்தான் அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என கமிஷனர் பேட்டி கொடுக்கிறார், இதற்கு திமுக அரசு கொடுக்கும் அழுத்தம்தான் காரணம். அரசு அலுவலர்கள், அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
சசிகலா, தினகரன் ஆகியோரின் கருத்துகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். தமிழகம் முழுவதும் 6 மாத சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். அவரை மதுரையிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குமாறு கேட்க உள்ளோம்.
தற்போது திமுகவின் தோழமைக் கட்சிகள் ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தமிழக மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். படையப்பா படத்தில் வருவது போல சட்டமன்றத்தில் கதாநாயகனாக இருப்பது எடப்பாடி பழனிசாமிதான், ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்" என்றார்.