சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுகிறது: ஆளுநர் மாளிகை
தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) காலை கூடிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் உடனே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கூற, அதற்கு முதல்வர், பேரவைத் தலைவர் மறுத்துவிட்டதால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் என மரபுப்படியே சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் ஆளுநருக்காக மரபை மாற்றம் செய்ய முடியாது எனவும் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
ஆளுநர் உரையை வாசிக்காமல் பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதற்கு பாஜக கூட்டணியில் உள்ள பாமக, திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | ஆளுநர் ஏன் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்? - முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஆனால் ஆளுநர் வருகையின் போதும், விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யாததைக் கண்டித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில்,
"இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.
அதற்குப் பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்க ப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" என்று பதிவிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை மரபை மாற்ற முடியாது! நடந்தது என்ன? - அப்பாவு பேட்டி