மியான்மரில் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!
மியான்மரில் சுமார் 60 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஜன.4) தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மியான்மரின் ஷன் மாநிலத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த டிச.30 அன்று கெங்டங் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் கருப்பு சந்தையில் விற்பதற்காக மொங்பிங் நகரத்திலிருந்து சுமார் 60 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது!
பின்னர் அவரிடமிருந்து அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் மீது அந்நாட்டு சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.
மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த போதைப் பொருளின் மதீப்பானது சுமார் 2.28 லட்ச அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று (ஜன.3) ஷன் மாநிலத்தில் சுமார் 40.2 கிலோ அளவிலான ஹெராய்ன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.