மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
`மக்களின் கோபத்தை திசைதிருப்பவே...' - சட்டசபை விவகாரம் குறித்து அண்ணாமலை
2025ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியதில், சட்டமன்ற மரபு படி தொடக்க உரை ஆற்ற வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்படுவதாகக் கூறி அவையை விட்டு வெளியேறினார்.
ஆளுநர் தொடக்க உரை வாசிக்காமல் புறப்பட்டதைச் சுட்டிக்காட்டி, "தனது அரசியல் சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!" என விமர்சித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
ஆளுநர் மாளிகை சார்பில், "ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். " என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் விவாதமாக எழுந்துள்ளது. இந்த நிலையில் திமுக அரசு பொதுமக்களின் கோபத்தை திசை திருப்பவே ஆளுநர் மீது பழிசுமத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Annamalai X Post
அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், "திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, மாண்புமிகு தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது. இன்று, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது. திமுக அரசுக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
"1. கடந்த நவம்பர் 23, 1970 அன்று, மனோன்மணீயம் சுந்தரனார் பிள்ளை அவர்கள் எழுதிய அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை, மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் ஒரு அரசாணை மூலம் அறிவித்தார். அரசு தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
2. இருப்பினும், 1991 ஆம் ஆண்டு வரை, தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
"3. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம், செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோதுதான், முதல்முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
4. மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் நடக்கும் முறையான அரசு நிகழ்ச்சிகளில், ஆளுநர்/ துணைநிலை ஆளுநர் வருகையின் போதும், நிகழ்ச்சியிலிருந்து விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவு, 1971 ஆம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
"அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்] வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆளுநர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழக பாஜக-வின் நிலைப்பாடு." என தெரிவித்துள்ளார்.