பாக்: மே.9 கலவரத்தின் குற்றவாளிகள் 19 பேரின் கருணை மனு ஏற்பு!
பாகிஸ்தான் ராணுவம் மே.9 கலவரத்தில் தொடர்புடைய 19 குற்றவாளிகளின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 9 அன்று பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் கலவரத்தில் ஈடுப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராவல்பிண்டியிலுள்ள ராணுவ தலைமை செயலகம் உள்பட பல்வேறு ராணுவ கட்டிடங்களின் மீதும் தாக்குதல் நடத்தி தகர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட நாடுத் தழுவிய கைது நடவடிக்கைகளில் அந்த ராணுவத் தளவாடங்களில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு அவர்களில் 85 பேருக்கு 2 முதல் 10 வருடம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தங்களது தண்டனையை குறைக்குமாறு கருணை மனு அளித்திருந்தனர்.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதல்: 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!
இந்நிலையில் இன்று (ஜன.2) பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, மே 9 வன்முறையில் ஈடுப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில், 67 பேரது கருணை மனு ஏற்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 48 பேரது மனுக்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் 19 பேரது மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஏற்பதா இல்லையா என்பது வரக்கூடிய காலங்களில் முடிவு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.