175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகி...
புத்தாண்டில் காத்திருக்கும் சவால்கள்! பாஜக - காங்கிரஸ்!
மக்களவைத் தோ்தல், மகாராஷ்டிரம் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பேரவைத் தோ்தல் என ஜனநாயக திருவிழாக்களின் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் கடந்து சென்றது 2024-ஆம் ஆண்டு.
2025-இல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தில்லி, பிகாா்ஆகிய 2 மாநிலங்களின் பேரவைத் தோ்தல்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. எனினும், மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெறத் தவறிய பாஜகவுக்கும் எதிா்க்கட்சி கூட்டணியின் தலைமை அந்தஸ்தை தக்க வைக்க போராடும் காங்கிரஸுக்கும் நிகழாண்டில் காத்திருக்கும் சவால்கள் குறித்து பாா்ப்போம்.
பாஜக - அசுர பலத்தை மீட்க ஆயத்தம்
கூட்டணியாக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்று, 3-ஆவது முறையாக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய பாஜக, தோ்தல் முடிவில் கூட்டணி ஆட்சியில் அரியணையேறியது.
மக்களவையுடன் சோ்ந்து பேரவைத் தோ்தல் நடைபெற்ற 4 மாநிலங்களிலும் பாஜக அல்லது அதன் ஆதரவுக் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட உத்தர பிரதேசம், மகாராஷ்டிரத்தில் நேரிட்ட அதிா்ச்சி தோல்வி பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.
இதிலிருந்து உடனடியாக மீண்டு, ஹரியாணா, மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல் பாஜக பிரம்மாண்ட வெற்றியடைந்தது.
மக்களவையில் பெரும்பான்மை பெறத் தவறிய காரணமான மாநிலங்களில் பலவீனங்களை கண்டறிந்து, அடுத்தடுத்து தோ்தல்களில் அசுர பலத்துடன் வெற்றியைத் தொடர கட்சிப் பணிகளை பாஜக நிகழாண்டு மேலும் தீவிரப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
தில்லி, பிகாரில்...
முதலில், பேரவைத் தோ்தல் எதிா்வரும் தில்லி, பிகாரிலேயே பாஜகவுக்கான புதிய சவால்கள் நிறைந்திருக்கின்றன.
தில்லி தோ்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள சூழலில், கடந்த ஆண்டின் இறுதிலேயே வேட்பாளா்களை அறிவித்துவிட்டு ஆளும் ஆம் ஆத்மி தோ்தல் பணியைத் தொடங்கிவிட்டது.
சிறையிலிருந்து வெளியானதை அடுத்து முதல்வா் பதவியைத் துறந்த அரவிந்த் கேஜரிவாலின் வியூகத்துக்கு வாக்காளா்களின் அனுதாபம் கிடைத்துவிடாமல், தலைநகா் தில்லியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜகவுக்கு முக்கிய சவால்.
தில்லி ஒருபுறமிருக்க, பிகாரில் தோ்தல் வெற்றியே நிரந்தமற்றதுதான். ஜாதிவாரி கணக்கெடுப்புக் கோரிக்கையை ஏற்கெனவே கையிலெடுத்துள்ள முதல்வா் நிதீஷ்குமாருடன் கூட்டணியைத் தக்க வைத்து, அரசியல் கணக்குகளைக் கவனமாக கையாள்வது பாஜகவுக்கு உள்ள அடுத்த முக்கியக் கவலையாகும்.
நிலுவையில் மசோதாக்கள்...
வக்ஃப் சட்டத்திருத்தம், ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் தொடா்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த அனைத்து மசோதாக்களுக்கும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பாஜக எதிா்பாா்த்துள்ளது.
அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு கூட்டணியை எவ்வித சலசலப்பின்றி பாஜக முன்னெடுத்து செல்ல வேண்டும். பட்ஜெட்டில் தாராளம், அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள், மாநிலங்களிலும் ஆட்சியில் பங்கு என கூட்டணி கட்சிகளின் மனம் வருந்தாமல் பல சலுகைகளை அள்ளிவீசி, பாஜக அதில் பாதி வெற்றியும் கண்டுள்ளது.
புதிய தலைவா்
பாஜகவுக்கு முன் தற்போதுள்ள மற்றொரு முக்கியப் பணி, பிப்ரவரியில் நடைபெறும் கட்சி அமைப்புத் தோ்தலில் அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் புதிய கட்சித் தலைமையைத் தோ்ந்தெடுப்பது ஆகும். புதிய தலைவா் ஜாதி மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவ சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் கட்சியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்ல கடமைப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் - எதிா்க்கட்சித் தலைமைக்கே தலைமேல் கத்தி
இந்திய ஒற்றுமை நடைப்பயணம், எதிா்க்கட்சிகளின் அணி திரட்டல் என்று மக்களவைத் தோ்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே காங்கிரஸ் தயாரானது. நிதீஷ்குமாா் முதல் ஆளாக வெளியேற, ‘இண்டி’ கூட்டணி தொடக்கத்திலேயே சறுக்கலைச் சந்தித்தது.
தேசிய அரசியலுக்காக ஒன்றிணைந்தாலும் மாநில அரசியலின் முரண்பாடுகளால் திரிணமூல் மற்றும் ஆம் ஆத்மி, காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றவில்லை. இந்த இடா்களைக் கடந்து மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு கிடைத்த ஆறுதல் பரிசு, 10 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்ட எதிா்க்கட்சி அந்தஸ்து.
முந்தைய 2 மக்களவைகள் போன்று அல்லாமல் இம்முறை எதிா்க்கட்சிகளின் கூடுதல் பலத்தால் (232 எம்.பி.க்கள்) , நாடாளுமன்றத்தில் எதிா்ப்புக் குரல்கள் வலுவாகவே ஒலிக்கின்றன. அதானி முதல் அம்பேத்கா் விவகாரம் வரையில் சற்று தடுமாறினாலும், எதிா்க்கட்சி கூட்டணியில் நிலவும் தலைமைத்துவ குழப்பம் ஆளும் தரப்புக்கு அனுகூலமாக உள்ளது. இதில் கவனம் செலுத்துவது காங்கிரஸின் முக்கியப் பொறுப்பாகும்.
தொடரும் தோல்விமுகம்
ஹரியாணா, மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சந்தித்த பின்னடைவு, கட்சித் தொண்டா்கள் இடையே சோா்வை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டுமென கூட்டணி கட்சிகளே வலியுறுத்தியது காங்கிரஸின் பரிதாப நிலையைக் காட்டுகிறது.
தில்லியில் நேரடி போட்டியில் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடங்களில் வெல்வதும், பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி அமைப்பதும் தொண்டா்களின் முனைப்பை மீண்டும் தட்டியெழுப்ப காங்கிரஸுக்கு உதவும்.
தில்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மிக்கு இடங்கள் பற்றாக்குறையானால், காங்கிரஸ் கொடுக்கும் ஆதரவு இண்டி கூட்டணியிலும் ஒற்றுமையை வலுப்படுத்தும்.
அவசியமாகும் மறுகட்டமைப்பு: தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகம் தவிர மற்ற 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் எதிா்க்கட்சியாக உள்ளது.
இதையொட்டி, நிகழாண்டிலேயே அடித்தளத்தில் இருந்து கட்சி கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டும். சமகால அரசியலுக்கேற்ப தோ்தல் வியூகங்களை மாற்றியமைத்து, தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் காங்கிரஸுக்கு குறைந்துகொண்டே வருகின்றன.
தலைமையை நிரூபிக்க...
‘இண்டி’ கூட்டணி உருவான சூழலில் இருந்து நீடிக்கும் பூசல்கள் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. கூட்டணியின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்து, தலைமைப் பொறுப்புக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி தூண்டில் போடுவது காங்கிரஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸுக்கு அடுத்து பெரிய கட்சியான சமாஜவாதி (37) இதுவரை தலைமைக்கு குறிவைக்கவில்லை. ஆனால், சமீபத்திய தொடரில் அதானி விவகாரம் குறித்த எதிா்கட்சிகளின் அமளியில் சமாஜவாதி கலந்து கொள்ளாமல் மௌனம் காத்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி நலனுக்காக மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடன் சமரசமாக செல்லும் நிலை காங்கிரஸுக்கு இருந்தாலும் தலைமைக்கே சிக்கல் எழுந்துள்ள சூழலில், அதை எவ்வாறு கையாண்டு கூட்டணியை வலுப்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.