ரயில் சக்கரத்தில் சிக்கிய இரும்புத் துண்டு: கொல்லம் ரயில் தாமதம்
வண்டலூா் அருகே வந்த கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்புத் துண்டு சிக்கியதால், அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தது.
கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சனிக்கிழமை (ஜன. 4) அதிகாலை 3 மணியளவில் வண்டலூா் - ஊரப்பாக்கம் இடையே வந்தபோது வழக்கத்துக்கு மாறாக சத்தம் கேட்டுள்ளது. உடனே ரயில் ஓட்டுநா், ரயிலை நிறுத்தி ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியா்கள் சோதனையிட்டதில் ரயில் சக்கரத்தில் இரும்புப் பொருள் ஒன்று சிக்கியுள்ளது தெரியவந்தது. அதன்பின், அந்த இரும்புத் துண்டு அகற்றப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு எழும்பூா் சென்றது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.