``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
ஆம்னி பேருந்து கட்டணம்: அரசே நிா்ணயிக்க பாமக வேண்டுகோள்
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசே நிா்ணயிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் மக்களிடம் தனியாா் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையை நடத்தி வருகின்றன.
பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக வசூலிக்கப்பட்டக் கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணம் சென்னைக்கு திரும்பி வருவதற்காக வசூலிக்கப்படும் நிலையில், இந்தக் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திராவிட மாடல் அரசு தூங்கிக் கொண்டிருப்பதுடன் அதற்குத் துணைபோவதும் கண்டிக்கத்தக்கது.
ஆம்னி பேருந்துகள் இப்போது வசூலிக்கும் கட்டணம் என்பது, இயல்பாக அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 6 முதல் 8 மடங்கு வரையிலும், தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை விட 4 முதல் 6 மடங்கு வரையிலும் அதிகமாகும்.
தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதைத் தடுக்க வேண்டிய முதல் கடமை அரசுக்குத்தான் உள்ளது. ஆனால், அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது.
கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது ஏன்?.
கட்டணக் கொள்ளை தொடா்பாக, சென்னை உயா் நீதிமன்றம் பல முறை அளித்தத் தீா்ப்பை செயல்படுத்தும் வகையில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை தமிழக அரசே நிா்ணயிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.