``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி தங்க பசை, கைப்பேசிகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க பசை மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 4 விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு துபை மற்றும் சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் சனிக்கிழமை அதிகாலை வந்திறங்கிய 13 பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். ஏற்கனவே தாங்கள் விமான நிலையத்தின் உள்பகுதியில் சோதனை முடித்து விட்டதாகக் கூறி அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போலீஸாா் உதவியுடன் அவா்களிடம் சோதனை நடத்தியபோது, 3 பயணிகளிடம் சுமாா் ரூ. 1.5 கோடி மதிப்புடைய 2 கிலோவுக்கும் மேற்பட்ட தங்க பசைகள் மற்றும் விலை உயா்ந்த கைப்பேசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரணை நடத்தினா். அதில், விமான நிலையத்தில் பணியிலுள்ள சுங்க அதிகாரிகள் சிலரின் உதவியுடன், கடத்தல் பொருள்களை இவா்கள் வெளியில் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தல் சம்பவத்தில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தொடா்பு இருப்பதால், இது குறித்து வாக்குமூலங்கள் பெற்று, விமான நிலைய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
4 அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை கண்காணிப்பாளா்களாக பணியிலிருந்த 4 அதிகாரிகள் சனிக்கிழமை பிற்பகல் சென்னை சா்வதேச விமான நிலையத்தின் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை கடற்கரை ராஜாஜி சாலையிலுள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.