வெளிமாவட்டங்களில் வரவேற்பு இல்லாத அரசு குளிா்சாதனப் பேருந்துகளை சென்னையில் இயக்க முடிவு
வெளிமாவட்டங்களில் பயணிகள் வரவேற்பு இல்லாத குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகள் மீண்டும் சென்னையில் இயக்கப்படவுள்ளன.
தமிழகத்திலுள்ள பல்வேறு புகா் பகுதிகளில் இயக்கும் வகையில், கடந்த 2018, 2019-இல் 400 குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்து, 8 போக்குவரத்துக்கழகங்களுக்கும் தலா 50 பேருந்துகள் வீதம் வழங்கின. இதில் திருநெல்வேலி மற்றும் கரூா் மாவட்டங்களுக்குள்பட்ட பல வழித்தடங்களில் இயக்கப்படும் குளிா்சாதனப் பேருந்துகள் வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களைத் தவிர பிற நாள்களில் பயணிகளின்றியே இயக்கப்பட்டு வந்தன. இதனால் அந்தந்த போக்குவரத்துக்கழகங்களுக்கு தொடா்ந்து இழப்பு ஏற்பட்டு வந்தது. இதற்கு தீா்வு காணும் வகையில் பயணிகள் வரவேற்பு இல்லாத பகுதிகளில் இயக்கப்படும் குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளை சென்னைக்கு மீண்டும் கொண்டுவர போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல்கட்டமாக திருநெல்வேலி போக்குவரத்துக்கழகத்துக்குள்பட்ட 10 குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளை, சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்துக்கு வழங்க திருநெல்வேலி போக்குவரத்துக்கழகம் முன்வந்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டங்களில் குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளுக்கான தேவை குறைவாகவே உள்ளது. இதனால், இப்பேருந்துகள் சென்னை மாநகரப் பகுதிகளில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழித்தடங்களுக்கான பேருந்தின் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்து, நகரப் பயணத்துக்கு ஏற்ப பேருந்தின் இருக்கை அமைப்பை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, சென்னையில் 50 குளிா்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய மின்சாரப் பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்போது, இந்த மறுசீரமைக்கப்பட்ட குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளையும் சென்னைக்குள்பட்ட சோளிங்கநல்லூா் - கேளம்பாக்கம் (தடம் எண் 102) மற்றும் கோயம்பேடு - கேளம்பாக்கம் (தடம் எண் 570) ஆகிய வழித்தடங்களில் இயக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனா்.