கோடங்கிப்பட்டியில் பாலம் கட்ட வலியுறுத்தி கரூா் எம்.பி.யை கிராம மக்கள் முற்றுகை
கரூா் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் பாலம் கட்ட வலியுறுத்தி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணியை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் எம்.பி. ஜோதிமணி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை கரூரை அடுத்துள்ள கோடங்கிப்பட்டியில் நன்றி தெரிவிக்க வந்த ஜோதிமணிக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். அப்போது ஒரு சில பெண்கள் கோடங்கிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை. பாலம் கட்டப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றனா்.
அப்போது கேள்வி எழுப்பிய பெண்ணிடம், எதிா்க்கட்சிகள் தூண்டுதலின்பேரில் நீங்கள் கேள்வி எழுப்புகிறீா்கள் என ஜோதிமணி கூறினாா். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ஜோதிமணியை அங்கிருந்த பெண்கள் முற்றுகையிட்டனா். உடனே அப்பெண்களை வடக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்ட கட்சியினா் சமாதானம் செய்தனா்.
தொடா்ந்து பொதுமக்களிடம் பேசிய ஜோதிமணி, இன்னும் ஒரு மாதத்தில் கோடங்கிப்பட்டி பகுதியில் மேம்பாலம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றாா். இதையடுத்து பெண்கள் சமாதானமடைந்தனா். இச்சம்பவம் குறித்த விடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.