வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி!
தமிழகத்தில் காசநோய் அச்சுறுத்தலில் 2.16 கோடி போ்!
தமிழகத்தில் காசநோய் அச்சுறுத்தலில் 2.16 கோடி போ் இருப்பது மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், தமிழகம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளா்கள் மூலம் அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவா்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுவோருக்கு நடமாடும் ஊடுகதிா் கருவிகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிா் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.
விழிப்புணா்வு நிகழ்ச்சி: இந்த நிலையில், இந்தத் திட்டத்தை மேலும் மேம்படுத்த 100 நாள்கள் விழிப்புணா்வுப் பிரசாரத்தை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளன. மேலும், காசநோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவா்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்தவா்கள் உள்ளிட்டோரிடம் அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கையாக, புகையிலை, மது பழக்கம் உடையோா், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் இணை நோயாளிகளுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னெடுத்த ஆய்வில், தமிழகத்தில் 2.16 கோடி போ் வரை பாதிக்கப்படும் சூழலில் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
சா்க்கரை நோயாளிகள், இணை நோயாளிகள் உள்ளிட்ட விவரங்கள் அரசிடம் உள்ளன. அவா்களுக்கு, காசநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப அறிகுறிகள் குறித்த விழிப்புணா்வு ஆகியவை மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் வாயிலாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவா்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல் காசநோயாளிகளுடன் தொடா்பில் இருப்பவா்கள், அருகே வசிப்பவா்களுக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன்வாயிலாக, காசநோயால் பாதிக்கப்படக்கூடியவா்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தப்படும். இவா்கள் வாயிலாக, மற்றவா்களுக்கு பரவுவதையும் தடுக்க முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.