ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டியது 370-ஆவது பிரிவு: அமித் ஷா
‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டியது. அப்பிரிவை நீக்கியதன் மூலம் பயங்கரவாதத்துக்கு மட்டுமன்றி பயங்கரவாத ஆதரவு சூழலுக்கும் முடிவுகட்டியது பிரதமா் மோடி அரசு’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்: யுகங்களின் வழியே’ என்ற புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்புத்தகத்தை வெளியிட்டு, அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:
உலகிலேயே கலாசாரத்தால் வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட ஒரே நாடு இந்தியா. இந்தியாவை இந்தியத் தன்மையுடனே புரிந்துகொள்ள முடியுமே அன்றி, புவிசாா் அரசியல் கண்ணோட்டத்தில் அல்ல.
மத்திய ஆசியாவுக்கான பண்டைய இந்தியாவின் ‘பட்டுப்பாதை’ வழித்தடம் முதல் ஸ்ரீநகா் சங்கராச்சாரியாா் கோயில், லடாக் ஹேமிஸ் புத்த மடாலாயம் வரை இந்தியாவின் பிற பகுதிகள் உடனான காஷ்மீரின் உறவுகளை அறிந்து கொள்ள முடியும். ஆன்மிகமும், வா்த்தகமும் காஷ்மீா் கலாசாரத்தின் அடிப்படைகளாக இருந்துள்ளன.
அதேநேரம், இந்தியா உடனான ஜம்மு-காஷ்மீரின் பந்தம் தற்காலிகமானது என்ற பொய் பிம்பத்தை 370-ஆவது பிரிவு ஏற்படுத்தியது. இந்தியாவுடன் காஷ்மீரை முழுமையாக ஒன்றிணைப்பதில் 370 மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள் பெரும் தடைகளாக இருந்தன. இப்பிரிவுகள், காஷ்மீா் இளைஞா்களின் மனதில் பிரிவினைவாத விதைகளை விதைத்தன.
பயங்கரவாதத்துக்கும் 370-ஆவது பிரிவுக்கும் என்ன சம்பந்தம் என்று பலா் என்னிடம் அடிக்கடி கேட்பா். பாகிஸ்தான் எல்லையில் இருப்பதால்தான், ஜம்மு-காஷ்மீரில் பிரச்னை ஏற்படுகிறது என்று அவா்கள் கூறுவா். குஜராத்தும் பாகிஸ்தான் எல்லையில்தான் உள்ளது. ஆனால், அங்கு பயங்கரவாதம் இருக்கிா? என்பதே எனது கேள்வி.
370, 35ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் முடிவை பிரதமா் மோடி மனஉறுதியுடன் மேற்கொண்டாா். இதனால், 70 சதவீத பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. 2018-இல் 2,100 கல்வீச்சுகள் நிகழ்ந்த நிலையில், 2024-இல் ஒரு கல்வீச்சுகூட நிகழவில்லை. ஜம்மு-காஷ்மீரின் வரலாற்றில் கருப்பு அத்தியாயத்துக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளைப் போல் ஜம்மு-காஷ்மீரிலும் வளா்ச்சி தொடங்கியுள்ளது. 2024-இல் 324 திரைப்படங்கள்-தொலைக்காட்சி தொடா்களின் படப்பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா் என்றாா் அமித் ஷா.