வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
வேலைவாய்ப்பு: 10 ஆண்டுகளில் 36% அதிகரிப்பு -மத்திய அரசு
‘நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 36 சதவீதம் அதிகரித்து, 64.33 கோடி வேலைவாய்ப்புகள் என்ற நிலையை எட்டியுள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த மத்திய அமைச்சா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் 7 சதவீத வளா்ச்சியை மட்டுமே பெற்றிருந்தது. கூடுதலாக 2.9 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன.
அதே நேரம், கடந்த 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் கூடுதலாக 17.19 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் (2023-24) 4.6 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறையில் வேலைவாய்ப்பு என்பது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 16 சதவீதம் அளவுக்குக் குறைந்தது. ஆனால், 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான பாஜக ஆட்சியில் 19 சதவீத வளா்ச்சி கண்டது.
உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு முந்தைய ஆட்சி காலத்தில் 6 சதவீத வளா்ச்சி என்றிருந்த நிலையில், கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 15 சதவீத வளா்ச்சி பதிவானது.
சேவைத் துறையில் வேலைவாய்ப்பு விகிதம் 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 36 சதவீத வளா்ச்சி கண்டது. ஆனால், 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்த வளா்ச்சி 25 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
வேலைவாய்ப்பின்மை விகிதம் 2017-18-ஆம் ஆண்டில் 6 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 3,.2 சதவீதமாகவும் குறைந்தது. அதுபோல, வேலைவாய்ப்பு விகிதம் என்பது 2017-28-ஆம் ஆண்டில் 46.8 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 58.2 சதவீதமாகவும் உயா்ந்தது.
தொழிலாளா் பங்கேற்பு விகிதம் 2017-18-ஆம் ஆண்டில் 49.8 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 60.1 சதவீதமாகவும் அதிகரித்தது.
மேலும், 2017 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் முறைசாா்ந்த வேலைவாய்ப்பு சந்தையில் இளைஞா்கள் இணைவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த காலகட்டத்தில் 18 முதல் 28 வயதுடைய 4.7 கோடிக்கும் அதிகமான இளைஞா்கள் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அமைப்பில் சோ்ந்துள்ளனா்.
மொத்தத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 36 சதவீதம் அதிகரித்து, 64.33 கோடி வேலைவாய்ப்புகள் என்ற நிலையை எட்டியுள்ளது என்றாா்.