சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
Aus v Ind : 'தொடரை இழந்த இந்தியா!' - கம்பீர் செய்த அந்த 3 தவறுகள்
சிட்னி டெஸ்ட்டை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அத்தோடு இந்தத் தொடரையும் 2-1 என வென்று கோப்பையையும் கைப்பற்றியிருக்கிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது, அணியில் முக்கியமான வீரர்கள் பலரும் இல்லை. பல அறிமுக வீரர்களை வைத்துக் கொண்டுதான் ரஹானே அந்த பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றுக் கொடுத்தார். ஆனால், இந்த முறை இந்திய அணி முழு பலத்துடன் இருந்தது. அப்படியிருந்தும் இந்திய அணி தோல்வியை தழுவியிருக்கிறது. இந்திய அணியின் தோல்வியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. அவர் எடுத்த சில முடிவுகளும் அவரின் அணுகுமுறையும் இந்திய அணியை சிக்கலில் தள்ளியிருக்கிறது.
பிளேயிங் லெவன் :
கம்பீரை தவிர வேறு யாராவது பயிற்சியாளராக இருந்திருந்தால் ப்ளேயிங் லெவனுக்கான புகாரை அவர் மேல் எழுதிவிட முடியாது. ஆனால், அணிக்குள் கேப்டனுக்கு ஈடான அதிகாரத்தை கம்பீர் கொண்டிருக்கிறார். ஒரு கால்பந்து பயிற்சியாளரை போலத்தான் கம்பீர் நடந்துகொள்கிறார். அப்படியிருக்க கம்பீரிடம் இந்த கேள்வியை கேட்பதில் தவறே இல்லை. 5 போட்டிகளிலும் 5 விதமான ப்ளேயிங் லெவனை இந்திய அணி பயன்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய தொடரில் இப்படி ஒரு செட்டிலான அணி இல்லாமல் மாற்றங்களை செய்துகொண்டே இருந்ததும் பெரிய பிரச்னையே.
ஆஸ்திரேலிய அணியும் மாற்றங்களை செய்தது, அதை காரணத்தோடு செய்தது. ஆனால், இந்திய அணியைப் பாருங்கள். முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை எடுத்ததற்கும் இரண்டாவது போட்டியிலேயே அவரை ட்ராப் செய்துவிட்டு அஷ்வினை எடுத்ததற்கும் என்ன காரணம் இருந்தது? அடிப்படை புரிதலே இல்லாத முடிவு அது. பிரசித் கிருஷ்ணா அத்தனை சிறப்பாக வீசுகிறார். ஆனால், அவரை கடைசிப் போட்டியில்தான் லெவனில் சேர்த்திருந்தார்கள். இடையில் அநியாயமாக கில்லை வேறு ஒரு போட்டியில் டிராப் செய்திருந்தார்கள்.
பொழுதுபோகாமல் சீட்டுக்கட்டை கலைத்து போடுவதை போல கம்பீர் யூகங்களை வகுத்துக் கொண்டிருந்தார்.
குழப்பமான அணுகுமுறை :
'ஒரே நாளில் பெரிய டார்கெட்டை சேஸ் செய்ய வேண்டுமானாலும் அதை செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்கு நின்று பேட்டிங் ஆடி போட்டியை டிரா ஆக்க வேண்டுமானால் அதையும் செய்ய வேண்டும். நாங்கள் ஒரு குறிப்பிட்ட பாணியில் ஆடி அதற்கு ஒரு பெயரை வைத்துக் கொண்டு விடாப்பிடியாக பின்பற்ற எங்களுக்கு விருப்பமில்லை.' என இங்கிலாந்தின் 'Bazball' அணுகுமுறையையெல்லாம் சாடி கம்பீர் சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். சரி, கடந்த மூன்று மாதங்களில் இந்திய அணி அப்படி எந்த அணுகுமுறையோடு ஆடி போட்டியை வென்றிருக்கிறது என பார்த்தால், எப்படியும் இல்லை. உள்ளே இறங்கி டி20 போல கன்னாபின்னாவென பேட்டை சுழற்றி சீக்கிரமே அவுட் ஆகி கடுப்பாக்குவார்கள் அல்லது டிபன்ஸிவ்வாக ஆடுகிறோம் எனக் கூறிவிட்டு அப்படி ஆட தெரியாதது மாதிரி வரிசையாக விக்கெட்டுகளை விடுவார்கள்.
இதுதான் பிரச்சனை. இந்திய அணிக்கென ஒரு ஸ்டைலே இல்லை. இங்கிலாந்து 'Bazball' ஆடுகிறார்கள். ஆஸ்திரேலியா மரபார்ந்த கிரிக்கெட்டை ஆடுகிறது. இந்தியா என்ன கிரிக்கெட்டை ஆடுகிறது? கம்பீர் சொல்வதைப் போல சூழலுக்கு ஏற்ற கிரிக்கெட்டை ஆட வேண்டுமெனில், அதற்கேற்ற தகுதியுடன் இந்திய அணி இருக்கிறதா? வெற்றிப் பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய தேவையை கம்பீருக்கும் இந்திய அணிக்கும் தொடர் தோல்விகள் உணர்த்தியிருக்கும் என நம்புவோம்.
அதிகாரமற்றதை போன்ற பாவனை:
இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணியில் புஜாரா இருக்க வேண்டும் என கம்பீர் விரும்பியதாக ஒரு செய்தி தீயாக பரவியது. கம்பீர் தரப்பின் PR வேலையாக குற்றம்சாட்டப்பட்டது. இதன்மூலம் நான் விரும்பிய அணி எனக்கு கிடைக்கவில்லை, அதனால்தான் தோற்றோம் என கம்பீர் நிறுவ முயல்கிறார். தோல்வியின் பழியிலிருந்து தப்பிக்க முயல்கிறார். ஆனால், உண்மையில் இந்திய அணியின் எந்த பயிற்சியாளருக்கும் கிடைக்காத சலுகை கம்பீருக்கு கிடைத்தது என்பதே உண்மை. பார்டர் கவாஸ்கர் தொடருக்கான அணியை தேர்வுக்குழு தேர்வு செய்ய அமர்ந்த போது அந்தக் கூட்டத்தில் கம்பீரும் கலந்துகொண்டிருந்தார். இது இந்திய கிரிக்கெட்டில் இல்லாத வழக்கம்.
அந்தளவுக்கு பிசிசிஐ அவருக்கு அதிகாரத்தை கொடுத்திருந்தது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 'நான் தேவையில்லையெனில் விலகிக் கொள்கிறேன்.' என பெர்த் டெஸ்ட் முடிந்த சமயத்திலேயே அஷ்வின் கூறியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி தொடர் முடியும் வரை அணியில் இருக்க வைக்க கம்பீராலும் ரோஹித்தாலும் முடியவில்லை. எனில், அஷ்வின் நமக்கு தேவை இல்லை அவரை தாண்டி நாம் செல்லலாம் என்பதை தொடருக்கு முன்பாகவே முடிவு செய்திருப்பார்கள். எனில், எதற்கு அவரை அணியில் எடுத்தீர்கள்? லாஜிக்கே இல்லாமல் முடிவுகளை எடுத்துவிட்டு சரியான ரிசல்ட் கிடைக்கவில்லையென்றவுடன் பழி மட்டும் தன் மீது விழாமல் தப்பிக்க வேண்டும் என நினைக்கிறார்.
உள்ளூரில் ஒயிட் வாஷ், கையிலிருந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை தாரை வார்த்தது என கம்பீரின் காலத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக மோசமான தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பிசிசிஐ என்ன செய்யப் போகிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.