Andhra: "ஜெல்லி மீன்களின் அச்சுறுத்தல்; ஆமைகளின் துணை" - 52 வயதில் கடலில் 150 கி.மி நீந்திய பெண்!
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த 52 வயது பெண்மணி விசாகாபட்டினம் முதல் காக்கிநாடா வரை 150 கிலோ மீட்டர் தூரத்தைக் கடலில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
கோலி ஷியாமளா என்ற நீச்சல் வீராங்கனை டிசம்பர் 28 ஆம் தேதி விசாகாபட்டினத்திலிருந்து புறப்பட்டார். ஒரு நாளுக்கு 30 கிலோமீட்டர் வீதம் 5 நாட்கள் பயணித்து காக்கிநாடா சூர்யபேட்டை என்.டி.ஆர் கடற்கரையை வந்தடைந்துள்ளார்.
ஷியாமளா ஏற்கெனவே இலங்கை மற்றும் லட்சதீவுகளில் நீந்தி சாதனை படைத்திருக்கிறார். தொடர்ந்து இவரது செயல்பாடுகள் மூலம் பெண்கள் பலருக்கும் உதேவ்கமாக இருந்துவருகிறார்.
ஷியாமளா காக்கிநாடா கடற்கரையை அடைந்ததும் பெத்தபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிம்மகயால சின்னராஜப்பா, ரெட் க்ராஸ் தலைவர் ராமா ராவ், காக்கிநாடா மாநகராட்சி ஆணையர் பாவனா மற்றும் துறைமுக பொறுப்பாளர்கள் அவரை வரவேற்றனர்.
அவருக்கான பாராட்டு நிகழ்வில் அவரது அனுபவங்கள் மற்றும் சவால்கள் குறித்துப் பேசியுள்ளார். ஜெல்லி மீன்கள் அச்சுறுத்தலைக் கடந்ததையும் ஆமைகள் துணையுடன் மகிழ்ச்சியாக நீந்தியதையும் நினைவுகூர்ந்துள்ளார். அரிய வகை கடல் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசியுள்ளார்.
ஷியாமளாவின் சாதனைகள்!
2021ம் ஆண்டு ஷியாமளா, தமிழகம் மற்றும் இலங்கையை இணைக்கும் பாக்கு நீரிணையை (Palk Strait) குறுக்காகக் கடந்து சாதனைப் படைத்தார்.
பிப்ரவரி 2023 இல் லட்சத்தீவுகளைச் சுற்றியுள்ள சவாலான பகுதிகளில் நீந்திய முதல் ஆசிய நபர் என்ற பெருமையைப் பெற்றார். விசாகாபட்டினம் முதல் காக்கிநாடா வரையிலான நீச்சலில் 14 பேரைக் கொண்ட குழு ஷியாமளாக்கு உறுதுணையாகச் செயல்பட்டது. பொதுவாக நீச்சல் சாதனையை நிகழ்த்துபவர்களின் பாதுகாப்புக்காக இருப்பதுபோல இந்த குழுவிலும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் இடம் பெற்றிருந்தனர்.
ஷியாமளாவின் சாதனைகள் நீச்சல் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது...
விகடன் ஆடியோ புத்தகம்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...