ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முக்கியத்துவம் என்ன? ஷேன் வாட்சன் விளக்கம்!
'தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம்'
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம் என தேசிய தகவல் மையம்(என்ஐசி) தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் டிச. 23 அன்று இரவு கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்படி, ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை (ஃஎப்.ஐ.ஆா்.) பொது வெளியில் வெளியானது, தமிழகம் முழுவதும் கடும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. முதல் தகவல் அறிக்கையை வெளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும் கூறியிருந்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம் என தேசிய தகவல் மையம்(என்ஐசி) தெரிவித்துள்ளது.
அதாவது தகவல்களைப் பதிவேற்றும்போது ஐபிசி-யில் இருந்து பிஎன்எஸ் சட்டத்திற்கு தரவுகளை மாற்றுவதில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் முன்னதாக இதனை குறிப்பிட்டிருந்தார்.