ரசிகர்களைக் கவர்ந்த அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சி!
நடிகர் கமல்ஹாசன் சார்பில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு நடந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
தென்னிந்தியளவில் பிரபலமான இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். நடிகர் கமல்ஹாசனை வைத்து பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
தனித்ததுவமிக்க இயக்குநரான சிங்கீதம் சீனிவாச ராவுக்கு மரியாதை செய்யும் விதமாக சில வாரங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்தார்.
இதையும் படிக்க: ஷங்கர் இப்படி பேசியிருக்கக் கூடாது: அனுராக் காஷ்யப்
இதில், இயக்குநர்கள் மணிரத்னம், சந்தான பாரதி, நாக் அஸ்வின், லோகேஷ் கனகராஜ், சிதம்பரம் நடிகர்கள் சித்தார்த், சிவகார்த்திகேயன், நாசர், பசுபதி, கோவை சரளா மற்றும் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
4 நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் திரையிடப்பட்டு உரையாடல் நிகழ்ந்தது.
மிக சுவாரஸ்யமாகவும் அதேநேரம் ஒரு திரைப்படத்திற்குப் பின் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் அனுபவங்களை சிங்கீதம் சீனிவாச ராவ் பகிர்ந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. காரணம், 93 வயதான சிங்கீதம் சீனிவாசராவ் இப்போதும் நினைவுகளைத் துல்லியமாக மீட்பதும் நகைச்சுவையாக பேசுவதுமாக இருக்கிறார்.
அபூர்வ சிங்கீதம் எனப்பெயரிடப்பட்ட இந்நிகழ்வின் ஒவ்வொரு நாள் உரையாடலையும் யூடியூபில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பதிவேற்றியுள்ளது. இவை, ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.