வெற்றி பெறும் எண்ணத்தில் மாற்றமில்லை: பாட் கம்மின்ஸ்
இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் எண்ணத்தில் மாற்றமில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நாளை (ஜனவரி 3) தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையும் படிக்க:குடும்பமே முக்கியம்..! இலங்கை தொடரிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
ஆட்டத்தின் தீவிரத்தில் மாற்றமிருக்காது
ஆஸ்திரேலிய அணி 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில், சிட்னியில் நடைபெறும் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி போட்டியின் தீவிரத்தன்மையை குறையவிடாது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடனே விளையாடுகிறோம். அதனால், சிட்னியில் நடைபெறும் கடைசிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்திலும், போட்டியின் தீவிரத்தன்மையிலும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.
இதையும் படிக்க: ரோஹித் நீக்கப்பட்டாரா? ஓய்வறை விவாதம் குறித்து பேச மறுத்த கம்பீர்!
சில நேரங்களில் நாங்கள் அதிக ரன்கள் குவிப்பதை விரும்புகிறோம். மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் 400 - 500 ரன்கள் முன்னிலை பெற வேண்டும் என விரும்பினோம். அந்தப் போட்டியில் நாங்கள் நல்ல முன்னிலை பெறும் இடத்தில் இருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த முன்னிலையைப் பெறவில்லை. அதுதான் டெஸ்ட் கிரிக்கெட் என்றார்.