பிக் பாஸ் 8: இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறும் தீபக்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மூத்த போட்டியாளராக உள்ள தீபக், இளம் தலைமுறை போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக மாறுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. 88வது நாளான இன்று டிக்கெட் டூ ஃபினாலே எனப்படும் நேரடியாக இறுதிப்போட்டியாளராகத் தகுதி பெறுவதற்காக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பிக் பாஸ் வீட்டில் தொலைபேசி ஒலிக்கும். இதனை எடுக்கும் போட்டியாளருக்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டு டாஸ்க் கொடுக்கப்படும். ஆனால் இப்போட்டியில் அவர் விளையாடுவதற்கு பதிலாக தான் நம்பிக்கை வைத்து தேர்வு செய்யும் நபர் அப்போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால் தொலைபேசியில் பேசியவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். அதில் விரும்பும் புள்ளிகளை தனக்காக விளையாடியவருக்கு கொடுக்கலாம்.
இப்போட்டியில் அழைப்பை எடுத்த தீபக், தனக்காக விளையாட ராணவை தேர்வு செய்தார். ’நான் உன்னை நம்புறேன், நீ வாடா’ என ராணவை நம்பி தன்னுடைய போட்டியை விளையாட வைத்தார் தீபக்.
கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் 5 லிட்டர் நீரைக் குடிக்க வேண்டும் என்பதே அப்போட்டி. இதில் நம்பிக்கையுடன் பங்கேற்ற ராணவ், சிறிது நேரத்திலேயே ஆட்டத்தைக் கைவிடும் நிலை ஏற்பட்டது. பின்னர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
எனினும் தீபக் அவரது உழைப்பைப் பாராட்டினார். ’நீ தோல்வியடைந்ததற்காக கவலைபடாதே, உன்னுடைய முயற்சி உண்மையாக இருந்தது. அது மக்களிடம் பேசப்படும்’ எனக் கூறி நம்பிக்கையளித்தார்.
பிக் பாஸ் வீட்டில் பலரும் ராணவ் மீது நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில், முக்கியமான சுற்றின்போது ராணவ் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு போட்டியை வழங்கிய தீபக்கை பலர் பாராட்டி வருகின்றனர்.
இதில், ராணவ் போராளியைப் போன்று தெரிந்ததாகவும் தீபக் இளம் தலைமுறைக்கு வழிகாட்டியைப் போன்று மாறியதாகவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.