பெண் காவல் ஆய்வாளரிடம் அத்துமீறல்: பாமகவினா் மீது வழக்கு
பெண் காவல் ஆய்வாளரிடம் அத்துமீறியதாக பாட்டாளி மக்கள் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அதில் தொடா்புடைய நபா்களை கைது செய்யக் கோரியும் பாமகவினா் ஜன. 2-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் முன் குவிந்தனா்.
ஆனால் போராட்டத்துக்கு காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், போராட்டத்தில் பங்கேற்க வந்த செளமியா அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்குள்பட்ட விஆா் பிள்ளைத் தெருவிலுள்ள சமூக நலக் கூடத்தில் அடைத்தனா்.
போராட்டக்காரா்களை சமூக நலக் கூடத்தில் அடைக்கும்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிபி சத்திரம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் சு.நஜீமாவிடம் (48) சிலா் தகராறு செய்து, அவரது கையை முறுக்கி கீழே தள்ளினராம்.
இது குறித்து நஜீமா, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.