இஸ்ரேல் தாக்குதல்: 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் படுகொலைத் தாக்குதலில் வீடுகளை இழந்தும் கட்டாயமாக இடமாற்றப்பட்டும் லட்சக்கணக்கான பாலஸ்தீனப் பொது மக்கள் அங்குள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
இதேப்போல், இஸ்ரேலினால் மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த முவாஸி பகுதியிலுள்ள முகாமில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜன.2) அதிகாலையில் இஸ்ரேல் ராணுவம் முவாஸி பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸினால் நிர்வாகிப்படும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் 2 பேரும் பலியானதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை: மீறினால் ரூ. 10,000 அபராதம்!
இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பில் எந்தவொரு கருத்தும் தற்போது வரையில் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே, காஸா நகரத்தில் குளிர் காலம் துவங்கி அங்குள்ள மக்களை நெடுக்கடியில் தள்ளியுள்ளது. முகாம்களில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள போதுமான ஆடைகளும் வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்க இடமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த போரில் 45,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகளும் பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.