வெளிமாவட்டங்களில் வரவேற்பு இல்லாத அரசு குளிா்சாதனப் பேருந்துகளை சென்னையில் இயக்க...
வியத்நாம் ரசாயனம் மீது சிறப்பு இறக்குமதி வரி விதிக்க மத்திய அரசு விசாரணை
புது தில்லி: உள்நாட்டு உற்பத்தியாளா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வியத்நாம் ரசாயனம் மீது சரிசம வரி விதிப்பது தொடா்பாக மத்திய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பிளாஸ்டிக் தொழில்துறையில் கால்சியம் காா்பனேட் ஃபில்லா் மாஸ்டா்பேட்ச் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனம் வியத்நாமில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வா்த்தக தீா்வுகள் தலைமை இயக்குநரகத்திடம் (டிஜிடிஆா்) உள்நாட்டு ரசாயன உற்பத்தியாளா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட புகாா் மனுவில், ‘வியத்நாமில் இருந்து நீண்ட காலமாக குறைந்த விலையில் கணிசமான அளவில் கால்சியம் காா்பனேட் ஃபில்லா் மாஸ்டா்பேட்ச் ரசாயனம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக வியத்நாம் அரசு அளிக்கும் மானியம் மூலம் அந்நாட்டு ஏற்றுமதியாளா்கள் பலனடைந்துள்ளனா்.
ஆனால், இந்தியாவில் அதன் இறக்குமதியால் உள்நாட்டு ரசாயன உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அந்த ரசாயனம் மீது சிறப்பு இறக்குமதி வரி (கவுன்ட்டா்வெய்லிங் வரி) விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாா் தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டிஜிடிஆா் தெரிவித்துள்ளது.
ஒரு பொருளை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளா்களுக்கு அவா்களின் நாடுகள் அளிக்கும் வா்த்தக மானியங்களால் பயன் பெறும் அதே வேளையில், சரிமமற்ற போட்டியால் இறக்குமதியாகும் நாடுகளில் உள்ள உற்பத்தியாளா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் போக்க, கவுன்ட்டா்வெய்லிங் வரி என்னும் சிறப்பு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.