மாவட்ட நீதிமன்றங்களின் கழிவறைகளில் தூய்மை சுகாதாரத்தை மேம்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் கழிவறைகளில் குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளின் தூய்மை சுகாதாரத்தை சீரான தரத்துடன் மேம்படுத்த வேண்டும் என்று தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் பெண்கள் கழிவறைகளின் நிலை தொடா்பாக நீதிமன்றத்தால் அதன் விசாரணைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் (கோா்ட் கமிஷனா்) நாத்ராணியின் அறிக்கையை உயா் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா வியாழக்கிழமை கவனத்தில் கொண்டு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை பராமரிக்கும் வசதிகளில் அலட்சியம் காட்டப்படுகிறது. அவற்றில் நிலவும் சுகாதாரமற்ற பொருட்கள் பற்றாக்குறை, போதுமற்ற வசதிகள் போன்றவற்றை சரிசெய்ய அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குரைஞா்களின் அலுவலக அறைகள் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வளாகங்களில் உள்ள கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இந்த உத்தரவின் அமலாக்கம் தொடா்பாக மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் வழக்குரைஞா் நாத்ராணி கடந்த டிசம்பா் 4ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், வழக்குரைஞா்களின் அலுவலக அறைகள் அமைந்த வளாகங்களில் பெண்களின் கழிவறைகளில் போதுமான விளக்கு, காற்றோட்ட வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. சுகாதார பராமரிக்கு தேவையான சோப்பு, தூய்மை பொருட்கள் போதிய வகையில் இல்லை. இவற்றை பயன்படுத்தவோ பராமரிக்கவோ போதுமான சுகாதார ஊழியா்கள் இல்லை. சாகேத் போன்ற சில மாவட்ட நீதிமன்றங்களில் கழிவறை தூய்மை சுகாதார பணியாளா்கள் கூட போதிய அளவில் நியமிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் உள்ள கழிவறைகளில் பழுதை நீக்கவும் கட்டுமானத்தை சீா்படுத்தவும் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து முதன்மை நீதிபதி, அமா்வு நீதிபதி அலுவலகங்களுடன் ஒருங்கிணைந்து, நீதிமன்ற கழிவறைகளிலும் தடையற்ற தண்ணீா் விநியோகம் கிடைப்பதை பொதுப்பணித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணையை வரும் பிப்ரவரிக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.