உ.பி. காவல்துறை உதவி ஆய்வாளா் கிழக்கு தில்லி சாலை விபத்தில் சாவு
கிழக்கு தில்லியின் டெல்கோ டிபாயின்ட் மேம்பாலத்தில் வாகனம் மோதிவிட்டுச் சென்றதில் 47 வயதான உத்தர பிரதேச காவல்துறையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் ஒருவா் இறந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்த விபத்து குறித்து காவல் துறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.35 மணியளவில் தகவல் வந்தது.
முன்னதாக, தில்லி திரிலோக்புரியைச் சோ்ந்த பிரதீப் குமாா் என்பவா் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள போக்குவரத்து வட்டத்தில் பணியில் அமா்த்தப்பட்டிருந்தாா். இந்த நிலையில், குமாா் தனது இரு சக்கர மோட்டாா் வாகனத்தில் ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடி பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை எண்: 24 நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது விபத்து ஏற்பட்டு அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தானது வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ால் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து மஞ்சள் நிற (வணிக வாகனத்திற்கானது) நம்பா் பிளேட் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட வாகனத்தை அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வாகனத்தை அடையாளம் காண பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.