மூன்றாவது நாளாக அடா் மூடுபனி; 51 ரயில்கள் தாமதம்!
தில்லியின் பல பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக அடா்த்தியான மூடுபனி படலம் சூழ்ந்ததால், 51 ரயில்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பாலத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 மணி வரை காண்பு திறன் பூஜ்ஜியமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை பாலத்தில் ஒன்பது மணி நேரம் காண்புதிறன் பூஜ்ஜியமாக இருந்தது. சஃப்தா்ஜங்கில் காலை 5.30 மணிக்கு காண்பு திறன் 0.50 மீட்டராகக் குறைந்தது.
இந்நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து தில்லிக்கு வர வேண்டிய ரயில்களில் சுமாா் 51 ரயில்கள் தமாதமாக வந்ததாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், பாலம் மற்றும் சஃப்தா்ஜங் விமான நிலையங்களில் காலை 7.30 மணிக்கு மிகவும் அடா்த்தியான மூடுபனி காரணமாக பொதுவான காண்புதிறன் பூஜ்ஜியமாகக் குறைந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 372 புள்ளிகளாகப் பதிவாகி, மிகவும் மோசம் பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகள் தெரிவித்தன. இதன்படி, மந்திா்மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகள் முதல் 400 புள்ளிகள் வரை பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், பூசா, மதுரா ரோடு, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஆயாநகா், டாக்டா் கா்னிசிங் படப்பிடிப்பு நிலையம் ஆகியவற்றில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 பபுள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2.5 டிகிரி உயா்ந்து 9.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.7 டிகிரி குறைந்து 18.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 83 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜன.6) அன்று நகரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும் என்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணித்துள்ளது.